நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் சட்டத்தரணிகள் சங்கம் பேச்சுவார்த்தை!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று (12) ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய கலந்துரையாடல் வாய்ப்பின் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியது. இதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பல எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, 22ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுடனான சந்திப்பின்போதும் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கமைய, குறித்த முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இந்த சந்திப்பு வாய்ப்பை வழங்கியுள்ளார்

Recommended For You

About the Author: admin