பிரித்தானிய நாடாளுமன்ற இடைத்தேர்தல்

பிரித்தானிய நாடாளுமன்ற இடைத்தேர்தல் : வரலாறு காணாத வகையில் 34 வேட்பாளர்களை எதிர்கொள்ளும் நைஜல் ஃபாராஜ் (Nigel Farage)!

பிரித்தானியாவின் (Royaume-Uni) வலதுசாரி ‘ஐக்கிய இராட்சிய மறுசீரமைப்பு ‘ (Reform UK) கட்சியின் தலைவரான நைஜல் ஃபாராஜ், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கிளாட்டன் (Clacton) கடற்கரைத் தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில், வரலாறு காணாத எண்ணிக்கையிலான வேட்பாளர்களை எதிர்கொள்ளவுள்ளார்.

இத்தொகுதியில் அவரோடு சேர்த்து மொத்தம் 34 வேட்பாளர்கள் களமிறங்குவதாகத் உள்ளூர் தேர்தல் நடத்தும் அமைப்பான தெண்ட்ரிங் மாவட்ட மன்றம் (Conseil de district de Tendring) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே ஒரே தொகுதியில் இத்தனை பேர் போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும்.

கடந்த 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கிளாட்டன் தொகுதியில் 46.2 விழுக்காடு வாக்குகள் பெற்று நைஜல் ஃபாராஜ் வெற்றி பெற்றிருந்தார். எனினும், அவர் அறிவிக்காத 5 மில்லியன் பவுண்ஸு கள் (சுமார் 5.88 மில்லியன் யூரோ) நன்கொடை பெற்றது தொடர்பாக எழுந்த நாடாளுமன்ற விசாரணை மற்றும் ஊடகங்களின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக, இந்த மாதத் தொடக்கத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கும் ஃபாராஜ், “எனது செயல்களுக்கான தீர்ப்பை கிளாட்டன் மக்களே வழங்கட்டும்; ஒட்டுமொத்த அரசியல் அதிகார வர்க்கத்திற்கும் பாடம் புகட்டக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதனைப் பார்க்கிறேன்,” எனக் கூறி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தலைப் புறக்கணிக்கும் முதன்மைக் கட்சிகள்

நைஜல் ஃபாராஜின் இந்த முடிவை ஒரு வெற்று ‘விளம்பர உத்தி’ எனக் சாடியுள்ள நாட்டின் முதன்மைக் கட்சிகளான தொழிற்கட்சி (Labour), பழமைவாதக் கட்சி (Conservateurs), தாராளவாத ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகிய அனைத்தும் இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாமல் புறக்கணித்துள்ளன.

ஃபாராஜ் முறையான விசாரணைகளில் இருந்து தப்பித்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயல்வதாகத் தொழிற்கட்சியும், அவர் சோதனைகளை எதிர்கொள்ள அஞ்சி ஓடுவதாகப் பழமைவாதக் கட்சியின் தலைவர் கெமி பாடனோக்கும் (Kemi Badenoch) குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த ஒரு தொகுதி இடைத்தேர்தலுக்காக மட்டும் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து (Contribuable) 275,000 பவுண்ஸுகளுக்கும் மேல் (சுமார் 323,345 யூரோ) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செலவுத் தொகையைத் தங்களது ‘ரிஃபார்ம் யுகே’ கட்சியே ஏற்பதாக அறிவித்த போதிலும், தேர்தல் செயல்முறையின் நடுநிலைமையையும் சுதந்திரத்தையும் பேண இத்தகைய தனியார் நிதியுதவிகளைப் பெறுவது சட்டப்படி குற்றமாகும் எனப் பிரித்தானிய உள்ளாட்சி அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

களத்தில் உள்ள 34 வேட்பாளர்களில் 20 பேர் சுயேச்சைகள் (Indépendants) ஆவர். இவர்களுடன் சேர்ந்து வேடிக்கையான மற்றும் விந்தையான பின்னணிகளைக் கொண்ட பல வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்:
அதிகாரப்பூர்வ அரக்கர் நடனக் கிறுக்குக் கட்சி (Official Monster Raving Loony Party): இக்கட்சியைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கவுண்ட் பின்ஃபேஸ் (Count Binface): தலையில் குப்பைத்தொட்டி போன்ற கவசமும், கருப்பு அங்கியும் அணிந்து, தன்னை ஒரு ‘விண்வெளிப் போர்வீரன்’ என அழைத்துக்கொள்ளும் இவர்தான் இத்தேர்தலின் ஆகப் புகழ்பெற்ற விசித்திர வேட்பாளராகக் கருதப்படுகிறார்.

லாரன்ஸ் பொக்ஸ் (Laurence Fox): பிரபல நடிகரும் வலதுசாரி ஆளுமையுமான இவர், தான் தோற்றுவித்த ‘தி ரிக்ளைம்’ (The Reclaim Party) கட்சியின் சார்பில் ஃபாராஜை எதிர்த்துக் களம் காண்கிறார்.

முதன்மைக் கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், இந்த விசித்திர வேட்பாளர்களின் படையெடுப்பு கிளாட்டன் இடைத்தேர்தலை உலக அரங்கில் உற்றுநோக்க வைத்துள்ளது

Recommended For You

About the Author: admin