சவூதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையம் மீது தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் காயம்!
சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தம்மாம் நகரின் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், காயமடைந்த அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சவூதி அரேபியாவின் ஷைபா எண்ணெய் வயலில் உள்ள சவூதி அராம்கோ நிறுவனத்தின் வசதியொன்றை இலக்குவைத்து வந்த ஆளில்லா விமானத்தை அந்நாட்டின் வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்ததைத் தொடர்ந்து இருவர் உயிரிழந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
யேமனின் ஹூதி படைகளுக்கும், சவூதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற யேமன் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு முன்னர், ஒக்டோபர் 11ஆம் திகதி ரியாத்திலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒக்டோபர் 10ஆம் திகதி இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், சவூதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, அந்நாட்டிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஹூதி படைகளிடமிருந்து எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் என ரியாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகமும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

