ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் போர் விமானம் விபத்துக்குள்ளானது: விமானிகள் உயிர் தப்பினர்!
ரஷ்யாவின் மிக முக்கிய இராணுவ நிலப்பரப்பான கலினின்கிராட் (Kaliningrad) பகுதியில், அந்நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான ‘Su-30’ ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிடப்பட்ட வழக்கமான பயிற்சிப் பறப்பின் போதே இவ்விபத்து நேரிட்டுள்ளது. விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுவதற்கு முன்னதாகவே, அதிலிருந்த இரண்டு விமானிகளும் பாராசூட் (Eject) மூலம் சாதுரியமாக வெளியேறி உயிர்தப்பியுள்ளனர்.
உயிராபத்தின்றி மீட்பு:
மக்கள் வசிக்காத ஒதுக்குப்புறமான பகுதியிலேயே விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர், வெளியேறிய இரு விமானிகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்கள் உயிராபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், விபத்தின் போது விமானத்தில் எவ்வித வெடிமருந்துகளோ ஆயுதங்களோ பொருத்தப்பட்டிருக்கவில்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை; மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விபத்து இடம்பெற்ற கலினின்கிராட் பிராந்தியமானது நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளான போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளின் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள, ரஷ்யாவின் மிக முக்கியமான மற்றும் தீவிர இராணுவமயப்படுத்தப்பட்டபிராந்தியமாகும்.

