ICC Hall of Fame பட்டியல் – உச்சகட்ட கௌரவத்தை பெற்ற 3 நட்சத்திரங்கள்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் Hall of Fame கௌரவப் பட்டியலில், 2026ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களாக சௌரவ் கங்குலி, கெவின் பீட்டர்சன் மற்றும் அஞ்சும் சோப்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்கொட்லாந்தின் எடின்பரோவில் நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் Hall of Fameஇல் இடம்பெற்ற வீரர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி, இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன் மற்றும் இந்திய மகளிர் அணியின் முன்னாள் அணித்தலைவி அஞ்சும் சோப்ரா ஆகியோரின் கிரிக்கெட் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சௌரவ் கங்குலி இந்தியக் கிரிக்கெட்டை செதுக்கிய சிறந்த தலைவர்களில் ஒருவர்.

அத்துடன் 2003 உலகக் கிண்ண இறுதிப் போட்டி மற்றும் 2002 செம்பியன்ஸ் கிண்ண வெற்றிகளில் அணியை முன்னின்று வழிநடத்தியவர்.

மேலும் அஞ்சும் சோப்ரா இந்திய மகளிர் கிரிக்கெட்டில் 1,000 ஒருநாள் ஓட்டங்கள் மற்றும் 100 ஒருநாள் போட்டிகளைக் கடந்த முதல் வீராங்கனை.

2002இல் தென்னாப்பிரிக்காவில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றியைப் பெறத் தலைமை தாங்கியவராவார்.

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன் 2005 ஏஷஸ் தொடர் மற்றும் 2010 டி20 உலகக் கிண்ண வெற்றிகளில் மிக முக்கியப் பங்காற்றியவர்.

இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, இந்த தலைசிறந்த வீரர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கும் விதமாக, 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த Hall of Fame விருது, சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் மிக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin