இன்று (ஜூன் 30, செவ்வாய்க்கிழமை) இரவு பிரான்சு அணி தனது 32-அணிகள் சுற்றில் (16es de finale) சுவீடனை நியூயார்க்கில் எதிர்கொள்கிறது.
வான்பரப்பில் இருள்சூழ்ந்து மீண்டும் இடிமின்னளுடன் அடைமழை பெய்யுமா என்ற அச்சம் இரசிகர்களிடையே நிலவுகிறது.
திதியர் தேசாம்ப் (Didier Deschamps) தலைமையிலான பிரான்ஸ் அணி, இன்று பிரான்சு நேரப்படி இரவு 11 மணிக்கு நியூயார்க் பெருநகரத்தில் சுவீடனை எதிர்கொள்கிறது. வலிமையான சுவீடன் அணியினர் பிரான்ஸ் வீரர்களுக்குக் கடும் சவாலளிக்கக் காத்திருக்கிறார்கள் . கடந்த முறை ஈராக் அணிக்கு எதிரான ஆட்டத்தில், வான்முகடு கிழிந்து இடிமின்னலுடன் கொட்டித்தீர்த்த பேய்மழையால் ஆட்டம் சுமார் இரண்டு மணிநேரம் தடைபட்டது.
ஆயினும், இறுதியில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது. அத்தகையதொரு இயற்கைச் சீற்றம் இன்றும் நேருமா என்பதே அனைவரின் மனதிலும் எழும் வினாவாகும்.
இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரை இயற்கை அன்னை கருணை காட்டுவாள் என்றே தெரிகிறது. நியூயார்க் நகர மைதானத்தின் மீது கதிரவன் தன் பொற்கதிர்களைச் சிந்தும் தெளிவான வானமே நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர் . பிரான்சின் வானிலை ஆய்வு மையமும் (Météo-France) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டத்தின் போது, வெப்பத்தின் தகிப்பு சற்றுக் கூடுதலாக (32 முதல் 33 பாகை செல்சியஸ் வரை) இருந்தாலும், விளையாட்டைக் குலைக்கும் அளவிலான கொதிப்பு இருக்காது. மிக முக்கியமாக, கருமேகங்கள் திரண்டு வந்து மின்னல் வாள்களைச் சுழற்றும் எவ்வித அச்சுறுத்தலும் அங்கு இல்லை. எனவே, காற்றில் மின்காந்தச் சீற்றம் ஏற்பட்டால் ஆட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கடுமையான விதிகளால் இம்முறை ஆட்டம் தடைபடும் அபாயமில்லை. இதமான மாலைப் பொழுதில் ஆட்டம் தடையின்றி அரங்கேறும்.
ஆனால், இன்றைய ஆட்டத்தில் வென்று எதிர் சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெறவுள்ள அடுத்த சுற்றான எட்டாம் இறுதிச் சுற்றுக்கு (8es de finale) முன்னேறும் பட்சத்தில், பிலடெல்பியா (Philadelphie) நகரில் இயற்கையின் சீற்றம் மீண்டும் விளையாடக் காத்திருக்கிறது. (ஈராக் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் தடைபட்ட அதே மைதானம் இதுவாகும்).
பராகுவே அல்லது ஜேர்மனி அணியை எதிர்கொள்ளவுள்ள அந்த ஆட்டத்தின் போது, வான்பரப்பில் மீண்டும் கார்மேகங்கள் இருண்டு பேரிடி முழங்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 38 முதல் 39 பாகை செல்சியஸ் என்ற கொதிக்கும் வெப்பத்தில் தொடங்கும் நாளின் பிற்பகுதியில் புயல் வெடித்துச் சிதறும்.
மழையினால் வெப்பம் 32 பாகையாகத் தணியும் என்றாலும், ஈராக் ஆட்டத்தின் போது இடைவேளையில் பல மணிநேரம் காத்திருந்ததைப் போல, இரசிகர்கள் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மீண்டும் காத்திருக்க வேண்டிய நெருக்கடி ஏற்படலாம். நாம் கால்பந்துப் போரைக் காணக் காத்திருக்கிறோம்; வான் முகிலோ தன் போரைக் காட்டக் காத்திருக்கிறது! See less

