பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஆசிய இணைய வணிகத்தளங்களால் தந்திரமாகத் தவிர்க்கப்பட்ட இரண்டு யூரோ வரியானது முற்றிலுமாக நீக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
நாளை (ஜூலை 1, புதன்கிழமை) முதல் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதற்கும் பொதுவான மூன்று யூரோக்கள் ‘சுங்கவரி’ (Droit de douane) நடைமுறைக்கு வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, பிரான்சு தனிப்பட்ட முறையில் விதித்திருந்த இரண்டு யூரோ வரி நிறுத்திவைக்கப்படுவதாக வணிகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது
சீனாவிலிருந்து குவியும் 150 யூரோக்களுக்கும் குறைவான மதிப்புடைய சிறிய பொதிகளைக் (Petits colis) கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், கடந்த மார்ச் 1 ம் திகதி முதல் ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு யூரோக்கள் தேசிய வரியைப் பிரான்சு அரசு விதித்திருந்தது.
தொடக்கத்தில், இந்த ஜூலை மாதம் முதல் புதிய ஐரோப்பிய வரியான மூன்று யூரோக்களையும் சேர்த்து மொத்தம் ஐந்து யூரோக்களாக அறவிடவே திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் நவம்பர் மாதம் இது முழுமையான ஐரோப்பிய விதியாக மாற்றப்படவிருந்தது.
ஆனால், இந்த வரியைக் குறிவைத்த ஆசிய இணைய வணிகப் பெருநிறுவனங்களான ஷீன் (Shein), தெமு (Temu), அலிஎக்ஸ்பிரஸ் (AliExpress) போன்றவை ஒரு புதிய தந்திரத்தைக் கையாண்டன.
தங்களின் சரக்குகளைப் பிரான்சுக்கு நேரடியாக வானூர்திகளில் அனுப்புவதைத் தவிர்த்துவிட்டு, வரிவிதிப்பு இல்லாத அண்டை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி, அங்கிருந்து தரைவழியாகச் சரக்குந்துகளில் பிரான்சிற்குள் கொண்டுவந்தன.
இதன் விளைவாக, மார்ச் 1 முதல் சரக்குகளின் வரத்து 90 விழுக்காடு வரை அண்டை நாடுகளுக்குத் தடம் மாறியது. இந்த வரியின் மூலம் ஆண்டிற்கு 400 மில்லியன் யூரோக்கள் வருவாய் கிடைக்கும் என 2026 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாதம் வெறும் 2.3 மில்லியன் யூரோக்கள் மட்டுமே வசூலிக்கப்பட்டது
அண்டை நாடுகளை விட அதிக வரி விதிப்பதன் மூலம், ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலத்தில் பிரான்சு பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று அஞ்சுவதாலேயே இந்த வரி நீக்கப்பட்டுள்ளது. See less

