கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பாக மக்களிடையே அதிருப்தி

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பாக மக்களிடையே அதிருப்தி – பொலீஸ் பொறுப்பதிகாரி திரு. நஸீம் அவர்களின் மாற்றம் கோரி கோரிக்கை

கிளிநொச்சி மாவட்ட பொலீஸ் பொறுப்பதிகாரி திரு. நஸீம் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட மக்களிடையே அதிகரித்து வரும்
அதிருப்தி நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக வீதி விபத்துகள் சட்டவிரோத மணல் கடத்தல் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலைமைகள் தொடர்பில் பொதுமக்கள் பல்வேறு முறைப்பாடுகளை முன்வைத்த போதிலும், அவற்றுக்கு போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் சமூக மட்டத்தில் முன்வைக்கப்படுகின்றன. மேலும், சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதாக கூறப்படும் சில தரப்பினருடன் பொலீஸ் உயர் அதிகாரிகள் நெருக்கமான தொடர்புகளை பேணுவதாகவும், இதனால் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளின் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உண்மை நிலை வெளிக்கொணரப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை, மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையை வலுப்படுத்துவதற்காக பொலீஸ் நிர்வாகத்தில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களின் கவனத்திற்கு
செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எழுத்து மூலமாக ஆவணப்படுத்தப்பட்ட முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாதுகாப்பு,
சட்ட அமுலாக்கம் மற்றும் சமூக நலனை உறுதிப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட்டு, தேவையானால் நிர்வாக மாற்றங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin