கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

சம்பள உயர்வு, கொடுப்பனவுகள் மீள வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (05) நண்பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

மருத்துவர்களின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத சம்பள உயர்வுப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குதல், பொருளாதார நெருக்கடியின்போது குறைக்கப்பட்ட மேலதிக நேர மற்றும் விடுமுறைநாள் கொடுப்பனவுகளை மீண்டும் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

அத்துடன், வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உடனடியாக ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல், தங்குதடையின்றி மருந்துகளை வழங்குதல் மற்றும் வைத்தியசாலைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காமையும் போராட்டத்திற்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் கதிரமலை உமாசுதன் உள்ளிட்ட வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin