10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
2026 உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டங்கள், உலக கால்பந்தின் அரசனாகக் கருதப்படும் பலம் வாய்ந்த ஐரோப்பிய நாடுகளுக்குப் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளன.
இந்தத் தொடரின் அறிமுக ஆட்டங்களில் களம் கண்ட 10 முன்னணி ஐரோப்பிய அணிகளில், வெறும் 3 அணிகள் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
மாபெரும் அணிகள் பலவும் சமநிலையைச் சந்தித்ததுடன், சில ஜாம்பவான்கள் அதிர்ச்சித் தோல்வியையும் தழுவியுள்ளனர்.
இந்தத் தொடக்கக் கட்டத் தடுமாற்றம், நடப்பு உலகக்கோப்பைத் தொடரை இன்னும் விறுவிறுப்பாகவும், யாராலும் கணிக்க முடியாத ஒன்றாகவும் மாற்றியுள்ளது.
ஐரோப்பியக் கண்டத்திற்கு நிம்மதி அளிக்கும் வகையில் ஸ்காட்லாந்து, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் ஆகிய 3 அணிகள் மட்டுமே தங்களின் முதல் போட்டியில் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இதில் ஸ்காட்லாந்து அணி ஹெய்ட்டிக்கு எதிராகவும்,
ஜெர்மனி அணி குராசோவுக்கு எதிராகவும் அபார வெற்றி பெற்றன. குறிப்பாக, ஸ்வீடன் அணி துனிசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெகா வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
மறுபுறம், ஐந்து பலத்த ஐரோப்பிய அணிகளின் போட்டிகள் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் சமநிலையில் முடிவடைந்துள்ளன.
கனடாவுக்கு எதிரான போட்டியில் போஸ்னியா அணியும்,
எகிப்துக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியமும் (1-1) சமநிலை கண்டன.
அதேபோல், கத்தார் அணிக்கு எதிராக 1-1 என சுவிட்சர்லாந்தும்,
ஜப்பான் அணிக்கு எதிராக 2-2 என நெதர்லாந்தும் விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டன.
எல்லாவற்றிற்கும் மேலாக, பலம் வாய்ந்த ஸ்பெயின் அணி, உலகக்கோப்பைக்கு முதன்முறையாக அறிமுகமாகியுள்ள கேப் வெர்டே அணியிடம் 0-0 என கோல் ஏதுமின்றி அதிர்ச்சி சமநிலை கண்டது கால்பந்து உலகை உலுக்கியுள்ளது.
இந்தத் தொடரின் மிகப்பெரிய திருப்புமுனையாக இரண்டு முக்கிய ஐரோப்பிய ஜாம்பவான்கள் தங்களின் முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் செக் குடியரசு அணி தென்கொரியாவிடமும், துருக்கி அணி ஆஸ்திரேலியாவிடமும் அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளன.
முன்னணி அணிகளின் இந்தத் தொடர் சரிவு, உலகக்கோப்பைத் தொடரின் அடுத்தடுத்த சுற்றுகளை நோக்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

