அனுதாபம் போதும் – நீதியும் – நிலையான தீர்வுமே வேண்டும்
மீரியபெத்த பேரவலம் அரங்கேறி இன்றுடன் (29) திகதியுடன் 12 வருடங்களாகின்றன. மண்ணுக்குள் புதையுண்டு 37 பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
பலரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தாலும் சிலர் செத்து மடிந்த பின்பும் மண்ணுக்கு உரமானார்கள்.
இது மண்சரிவால் ஏற்பட்ட அவலம் என்பதைவிடவும் மனிதப்படுகொலை எனக் கூறுவதே பொருத்தம் என பலரும் கூறினர்.
இது உண்மைதான் என்பதை மிகத்தெளிவாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்தியாரத்ன எடுத்துரைத்திருந்தார்.
தொலைக்காட்சி நேர்காணலொன்றின்போது இது பற்றி அவர் தெளிவாக விவரித்திருந்தார்.
அவரின் கருத்து பின்வருமாறு அமைந்தது,
” 2014 ஒக்டோபர் 29 ஆம் திகதியே மீரியபெத்த மண்சரிவு இடம்பெற்றது. 36 பேர் பலியானார்கள். சிலரின் உடல்களை மீட்க முடியாமல்போனது. அக்காலப்பகுதியில் நான் ஊவா மாகாணசபை உறுப்பினராக செயல்பட்டேன்.
அனர்த்தத்துக்கு பின்னர், மண்சரிவு ஏற்படுமென முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததா என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் கேட்டிருந்தேன். குறித்த நிறுவனத்தால் எனக்கு கடிதம் அனுப்பட்டிருந்தது.
‘ மண்சரிவு ஏற்பட்ட பகுதி (மீரியபெத்த) அதி அபாய வலயமெனவும், அப்பகுதியில் உள்ள குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் 2007 ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்படியானால் ஏன் மக்களை அங்கிருந்து வெளியேற்றவில்லை மாவட்ட செயலாளரிடம் வினவினேன். ‘ ஹல்துமுல்ல பிரதேச செயலாளருக்கு கடிதம் எழுதினேன்.” என பதில் வந்தது. ஹல்முதுல்ல பிரதேச செயலாளரிடம் வினவினேன், ‘ கிராம சேவகருக்கு கடிதம் அனுப்பட்டது.” எனக் கூறப்பட்டது.
இதனையடுத்து கிராம சேவகரை நேரில் சென்று சந்தித்தேன்.
அங்கு முன்னர் இருந்த கிராம சேவகர் லயன்களுக்கு சென்று வெளியேறுமாறு மூன்று தடவைகள் எச்சரிக்கை விடுத்திருந்தார் எனக் கூறப்பட்டது.
ஆனால் லயத்தில் வாழ்ந்தவர்கள், தமக்கென காணி உரிமை இல்லாமல் – வருமானம் இன்றி எங்கு செல்வார்கள்? அவர்களுக்கு செல்வதற்கு இடமிருக்கவில்லை.
கடந்த காலங்களில் அரச பொறிமுறை அவ்வாறுதான் இடம்பெற்றது. இறுதியில் 36 பேர் உயிரிழந்தனர்.
இது மண்சரிவு அல்ல, தெரிந்தே இடம்பெற்ற மனிதப்படுகொலையெனக் கூறி ஊவா மாகாணசபையில் பிரேரணையொன்றை கொண்டுவந்தேன். ஏனெனில் அங்குள்ள மக்கள் சாவார்கள் என்பது அரசாங்கத்தக்கு முன்கூட்டியே தெரியும்.” என கருத்து வெளியிட்டிருந்தார் அமைச்சர் சமந்த வித்யாரத்ன.
எமது ஆட்சியில் இப்படியான நிலைமைக்கு இடமளித்துவிட முடியாது. மனசாட்சிக்கு விரோதமாக பணியாற்றவும் முடியாது என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும்போது பாதுகாப்பான இடங்களிலேயே ஒதுக்கீடு இடம்பெறவேண்டும். அதாவது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாயமில்லை என உறுதிப்படுத்தப்பட பகுதிகளிலேயே நிலம் வழங்கப்பட வேண்டும்.
மலையகத்தில் மட்டுமல்ல மண்சரிவு அபாய வலயத்தில் (வெளியேறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள) பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்தபட்சம் காணியும், சலுகைக்கடனும் வழங்கப்பட்டால் உயிரையும் காப்பாற்ற முடியும், உரிமையையும் வழங்க முடியும்.
மலையக மக்களுக்கு பாதுகாப்பான இடத்தில் காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இப்பதிவு.
அனுதாபம் போதும். இனி நீதியும், நிலையான தீர்வுமே வேண்டும்.

