செயற்கை நுண்ணறிவால் இயங்கும் எதிர்கால மருத்துவமனை:
பிரான்சில் ‘மருத்துவச் செயற்கை நுண்ணறிவுக் கூட்டணி’ திட்டம் தொடக்கம்!
பிரான்சின் மொ ண்ட்பெலியே (Montpellier) பல்கலைக்கழக மருத்துவமனையில், மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ‘மருத்துவச் செயற்கை நுண்ணறிவுக் கூட்டணி’ (Alliance Santé IA) என்ற அதிநவீனத் திட்டம் இன்று (ஜூன் 16, 2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் (Stéphanie Rist) முன்னிலையில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) உதவியுடன் இயங்கும் ஒரு மேம்பட்ட எதிர்கால மருத்துவமனையை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
பிரான்ஸ் 2030 என்ற தேசிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தின் 14.9 மில்லியன் யூரோக்கள் நிதி உதவியுடன், ‘அட்லின் சயின்ஸ்’ (ADLIN Science) என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் சுமார் 2,65,000 நோயாளிகள் சிகிச்சை பெறும் மொண்ட்பெலியே மருத்துவமனை, இப்புதிய தொழில்நுட்பத்திற்கான ஒரு நேரடி ஆய்வகமாகச் செயல்படவுள்ளது.
செயற்கை நுண்ணறிவானது மருத்துவமனையின் அன்றாடச் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பாதுகாப்பு அடுக்காக இணைக்கப்பட உள்ளது.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைச் சோர்வடையச் செய்யும் காகிதப் பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகளின் சுமையைக் குறைத்து, அவர்கள் நோயாளிகளின் சிகிச்சையில் கூடுதல் கவனம் செலுத்த இது பெரிதும் உதவும்.
நோயாளிகளுக்கான சிகிச்சை, மருத்துவ ஆராய்ச்சி, நோய் தடுப்புமுறை, பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் நிர்வாக மேலாண்மை என அனைத்துப் பிரிவுகளிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் கடினமான மருத்துவக் கலைச்சொற்களைச் சாமானிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் எளிய மொழியாக மாற்றுவதற்கு இந்தச் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. குறிப்பாக, 7 முதல் 8 வயதுடைய குழந்தைகளுக்குப் புரியும் வகையிலான பிரத்தியேக எளிய விளக்கக் கடிதங்களை உருவாக்கவும் இது பயன்படுத்தப்பட உள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் பல்வேறு நன்மைகளைக் கொண்டு வந்தாலும், சில எச்சரிக்கை நடைமுறைகளும் பின்பற்றப்பட உள்ளதாகத் திட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்:
செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் மருத்துவர்களின் இடத்தைப் பூர்த்தி செய்யாது. தவறுகளைத் தவிர்க்கவும், துல்லியத்தன்மையை உறுதிப்படுத்தவும் இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் எப்போதும் மருத்துவர்களிடமே இருக்கும்.
நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் மருத்துவ விவரங்கள் எக்காரணம் கொண்டும் மருத்துவமனையின் எல்லைகளைத் தாண்டி வெளியேறாது என்று பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 200 மருத்துவப் பணியாளர்கள் இந்தத் தொழில்நுட்பத்தை முதற்கட்டமாகச் சோதித்து வருகின்றனர். இதன் வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு, வரும் செப்டம்பர் (2026) மாதம் முதல் இந்தச் சேவை மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் படிப்படியாக முழுமையாக விரிவுபடுத்தப்பட உள்ளது.
“இது நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை மேலும் பாதுகாப்பானதாகவும், புதுமையானதாகவும், அனைவருக்கும் சமமானதாகவும் மாற்றுவதற்கான ஒரு தீர்க்கமான வரலாற்றுச் சுவடு” என்று பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்

