பிரித்தானியாவில் குடியேற்றவாசிகள் தங்கியிருந்த விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு:

பிரித்தானியாவில் குடியேற்றவாசிகள் தங்கியிருந்த விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 65 வயது நபர் குற்றவாளியாக அறிவிப்பு!

லண்டனின் இஸ்லிங்டன் பகுதியில் குடியேற்றவாசிகள் தங்கியிருந்த விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மார்க் நெவில் (Mark Neville – 65) என்பவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் 24 ஆம் திகதி இரவு 11 மணியளவில் இஸ்லிங்டனில் உள்ள டிங்லி வீதியில் (Dingley Road) அமைந்துள்ள குறித்த விடுதியின் நுழைவாயில் கேட் மீது முகமூடி அணிந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசி தீ வைத்துள்ளார்.

அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளியைக் கண்டறிந்தனர்.

விடுதிக்கு அருகே உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து மீட்கப்பட்ட கையுறையில் இருந்த டிஎன்ஏ (DNA), பெட்ரோல் குண்டின் உடைந்த கண்ணாடித் துண்டுகளிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ உடன் ஒத்துப்போனதை அடுத்து, செப்டெம்பர் 26 ஆம் திகதி பியர் வீதியில் (Pear Street) உள்ள அவரது வீட்டில் வைத்து மார்க் நெவில் கைது செய்யப்பட்டார்.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், தீவிர வலதுசாரி நடவடிக்கைகள் மற்றும் குடியேற்றத்திற்கு எதிரான வெறுப்புணர்வே இத்தாக்குதலுக்குப் பின்னணியாக இருந்துள்ளமை தெரியவந்தது.

ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்த நெவில், பின்னர் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நேற்றைய தினம் (ஒக்டோபர் 28) சினேர்ஸ்ஸ்புரூக் கிரவுன் நீதிமன்றத்தில் (Snaresbrook Crown Court) நடைபெற்ற விசாரணையின் போது, மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கில் தீ வைக்க முயற்சித்தது, கத்தி வைத்திருந்தது மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதமான ஸ்டன் கன் (stun gun) வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் அண்மைக் காலங்களில் புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் குடியேற்றவாசிகள் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதிகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் தீவிர வலதுசாரி குழுக்களின் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin