கடந்த சனிக்கிழமை முதல் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் ஒரு விசித்திரமான குறுஞ்செய்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “மெட்டா (Meta) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (IA) உங்கள் தனிப்பட்ட செய்திகளைப் படிக்கப் போகிறது” என்று கூறிப் பீதியைக் கிளப்பும் அந்தச் செய்தி முற்றிலும் ஒரு தவறான தகவலாகும்!
“வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவு அறிமுகமாகிறது. அது உங்கள் குழுக்களில் உள்ள செய்திகளைப் படிப்பதுடன், தொலைபேசி எண்களையும் தனிப்பட்ட தரவுகளையும் திருடும். இதைத் தடுக்க, உடனடியாக ‘மேம்படுத்தப்பட்ட தனியுரிமை’ (Confidentialité renforcée) விருப்பத்தைச் செயல்படுத்துங்கள்” என அந்தச் செய்தி மக்களை எச்சரிக்கிறது.
இது ஒரு தவறான செய்தி (Fake news) என்றாலும், இதில் எவ்வித இணைய மோசடியும் (Arnaque) இல்லை. இந்தச் செய்தியில் உங்கள் தகவல்களைத் திருடுவதற்கான எந்தவொரு வெளி இணைப்பும் (Link) கிடையாது.
மக்கள் இதை அப்படியே படியெடுத்துத் (Copy-paste) தங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வருகின்றனர். எனவே, இதைத் திறப்பதாலோ அல்லது மற்றவர்களுக்குப் பகிர்வதாலோ உங்கள் திறன்பேசிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது.
உங்களது தனிப்பட்ட உரையாடல்களை மெட்டா நிறுவனம் ரகசியமாகப் படிக்கிறது என்பது அப்பட்டமான பொய்யாகும். இது குறித்து அந்த நிறுவனம் தனது விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது:
“நீங்கள் ‘@Meta AI’ எனக் குறிப்பிட்டு நேரடியாகப் பேசும் செய்திகளையோ அல்லது உங்கள் விருப்பத்தின் பேரில் செயற்கை நுண்ணறிவுடன் நீங்கள் பகிரும் செய்திகளையோ மட்டுமே மெட்டாவால் படிக்க முடியும். உங்களின் மற்ற தனிப்பட்ட உரையாடல்களை எங்களால் ஒருபோதும் படிக்க முடியாது.”
பாதுகாப்பை மேலும் வலுவாக்குவது எப்படி?
வதந்திகளைத் தாண்டி, உங்களது வாட்ஸ்அப் குழுக்களில் நீங்கள் கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்ய விரும்பினால், பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
சம்பந்தப்பட்ட குழுவின் (Group) உரையாடல் பக்கத்திற்குச் செல்லவும்.
திரையின் மேற்புறத்தில் உள்ள குழுவின் பெயரைக் கிளிக் செய்யவும்.
கீழே நகர்த்திச் சென்று ‘மேம்பட்ட தனியுரிமை’ (Confidentialité avancée) என்ற தெரிவைச் சொடுக்கவும்.
அப்படியென்றால் ‘மெட்டா ஏஐ’ (Meta IA) என்பது என்ன?
இது பயனர்களுக்கு உதவும் ஒரு உரையாடல் இயந்திரம் (Robot) மட்டுமே. பயனர்கள் இணையத்தில் தேடுவதற்காக வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமலேயே, விடுமுறைப் பயணங்களுக்கான ஆலோசனைகள், சமையல் குறிப்புகள் போன்ற பல்வேறு தகவல்களை இதனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், செயற்கை நுண்ணறிவுடன் முற்றிலும் ரகசியமான முறையில் உரையாடுவதற்காக ‘மறைநிலை’ (Incognito) வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், நீங்கள் செய்யும் உரையாடல்களை மெட்டா நிறுவனம் பார்க்க முடியாது; மேலும், அந்த உரையாடல்கள் எங்கும் சேமிக்கப்படாமல் (Non stockées) உடனுக்குடன் சேவையகங்களில் (Servers) இருந்து அழிந்துவிடும்.
எனவே, ஆதாரமற்ற வதந்திகளை நம்பி அச்சப்படத் தேவையில்லை!

