ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ‘குடியேற்றம் மற்றும் தஞ்சக் கொள்கை’ : அகதிகளின் உரிமைகளைப் பறிக்கும் அரசாணை என மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்றம் மற்றும் தஞ்சம் கோருதல் தொடர்பான ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இது ஐரோப்பியத் தஞ்சக் கோரிக்கை அமைப்பையே (Système d’asile européen) ஆட்டம் காணச் செய்துள்ளது.
இது குறித்த அதிர்ச்சியூட்டும் பின்னணிகளையும் விரிவான விளக்கங்களையும் ‘பிரெஞ்சு தஞ்சக் கோரிக்கை உரிமைக்கான ஒருங்கிணைப்புக் குழு’ (CFDA – Coordination Française pour le Droit d’Asile) வெளியிட்டுள்ளது.
கடந்த 2024 மே 14-ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த மாபெரும் ஒப்பந்தம், ஒன்பது விதிமுறைகள் (Règlements) மற்றும் ஒரு வழிகாட்டுதல் (Directive) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது கடந்த ஜூன் 12, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கம் என்ன?
மூன்றாம் நாடுகளுடன் (Pays tiers) ஒப்பந்தம் செய்து தஞ்சம் கோருவோரின் வருகையை முற்றிலுமாகத் தடுப்பது.
எல்லையிலேயே புதிய தஞ்சம் கோரும் நடைமுறைகளைக் கொண்டுவந்து, ஐரோப்பாவிற்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையைக் கடுமையாகக் குறைப்பது.
பாதுகாப்புப் பெற்ற அகதிகள் கூட, ஒரு ஐரோப்பிய நாட்டிலிருந்து மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்கு இடம்பெயர்வதைத் (Mouvements secondaires) தடுப்பது.
ஜெனிவா ஒப்பந்தத்தில் (Convention de Genève) கூறப்பட்டுள்ள அகதிகளுக்கான அடிப்படை உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகவே இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
அகதிகளைத் தரம் பிரிப்பது (Logique du tri), சிறைப்படுத்துவது (Enfermement) மற்றும் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைப்பது (Exclusion) போன்ற மனிதநேயமற்ற நடவடிக்கைகளை இது ஊக்குவிப்பதாக CFDA அமைப்பு அஞ்சுகிறது.
வலதுசாரி கட்சிகளின் (Partis populistes) தூண்டுதலாலேயே அடிப்படை உரிமைகள் இவ்வாறு பறிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தச் சட்டத்தை பிரெஞ்சு சட்ட அமைப்பிற்குள் நடைமுறைப்படுத்த அரசுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் இருந்தபோதிலும், மனித உரிமை அமைப்புகளுடன் எந்தவொரு ஆலோசனையும் இன்றி, அவசர அவசரமாகக் கடந்த ஜூன் தொடக்கத்தில் சில அரசாணைகளை (Décrets d’application) பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.
பிரான்சில் இந்தப் புதிய விதிகள் ஜூன் 12, 2026 முதல் புதிதாகத் தஞ்சம் கோருபவர்களுக்கும் (Demande d’asile) ,அதற்கு முன் கோரிக்கை அளித்திருந்தாலும், ஜூன் 12-க்குப் பிறகு அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட கோரிக்கைகளுக்கும் பொருந்தும்.

