பிரான்சில் வரி செலுத்துவோருக்கு ஓர் இனிய நற்செய்தி! இன்று (வெள்ளிக்கிழமை, ஜூலை 24) முதல் சுமார் 1.26 கோடி வரி செலுத்தும் குடும்பங்களுக்கு (Foyers fiscaux), அவர்கள் அரசுக்கு அதிகப்படியாகச் செலுத்திய வரிப்பணம் திரும்ப வழங்கப்படவுள்ளது.
ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் திருப்பியளிக்கும் பணிகளால், மக்களின் வங்கிக் கணக்குகளில் எதிர்பாராத பணவரவு காத்திருக்கிறது!
இந்த நடவடிக்கையின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 1,057 யூரோக்கள் திரும்பக் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது ‘பொது நிதி இயக்குநரகத்தால்’ (DGFIP FINANCES PUBLIQUES) நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு இணையவழியாக மாற்றப்படும்.
உங்கள் வங்கிப் பரிவர்த்தனைப் பட்டியலில் «REMB IMPORT REVENUS» என்ற பெயரில் இந்த வரவு வைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை நீங்கள் வரித்துறையிடம் உங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கவில்லை என்றால், கவலை வேண்டாம்; உங்கள் வீட்டு முகவரிக்கு நேரடியாகக் காசோலையாக (Chèque) அனுப்பி வைக்கப்படும்.
‘மூலத்தில் வரி பிடித்தம்’ (Prélèvement à la source) செய்யும் தற்போதைய நடைமுறையில், சிலருக்கு அவர்களின் உண்மையான வருமானத்தை விட அதிக அளவில் வரி பிடித்தம் செய்யப்பட்டிருக்கலாம்.
உங்களின் வருமானம் திடீரெனக் குறைந்தாலோ அல்லது திருமணம், குழந்தை பிறப்பு போன்ற குடும்பச் சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ இது நிகழ வாய்ப்புள்ளது.
மேலும், தொண்டு நிறுவனங்களுக்கு நீங்கள் வழங்கிய நன்கொடைகள் (Dons) அல்லது குறிப்பிட்ட செலவீனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகள் (Crédit d’impôt) காரணமாகவும் இந்த உபரித் தொகை உங்களுக்குத் தற்போது முறையாகத் திரும்பக் கிடைக்கிறது.
மக்களுக்குப் பணம் கிடைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பல இணைய மோசடிகள் (Arnaques) அரங்கேற வாய்ப்புள்ளதாக அரசு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அரசுத் துறை அதிகாரிகளைப் போலவோ அல்லது வரித்துறையிலிருந்தோ வருவதாகக் கூறி உங்களைத் தொடர்புகொள்ளும் போலியான மின்னஞ்சல்கள் (Mails), குறுஞ்செய்திகள் (SMS) அல்லது தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்.
உங்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் வங்கி ரகசியங்களைத் திருடுவதே இந்த இணையப் திருடர்களின் (Pirates) முக்கிய நோக்கமாகும்.
உங்கள் வரிப்பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு நீங்கள் எந்தவொரு விண்ணப்பமும் செய்யவோ, இணைப்புகளைச் சொடுக்கவோ தேவையில்லை; இது நூறு சதவீதம் ஒரு தானியங்கி (Automatique) முறையாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் !

