இந்தியப் பெருங்கடலின் நடுவே, ஆப்பிரிக்கக் கண்டத்தின் அருகே மடகாஸ்கர் தீவுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய பிரெஞ்சுத் தீவு ‘ரீயூனியன்’. தமிழ்நாட்டிலிருந்து சுமார் ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தத் தீவில், வீதிகளில் நடக்கும்போது ‘அரோகரா’ கோஷமும், காற்றில் முருங்கைக்காய் சாம்பாரின் வாசனையும் வீசும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அதுதான் உண்மை!
ரீயூனியன் தீவுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான தொடர்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இத்தொடர்பினை இரு வேறு காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.
ஆரம்பகால வருகை (17ஆம் நூற்றாண்டு)
பிரெஞ்சுக்காரர்கள் 1660-களில் இத்தீவில் குடியேறத் தொடங்கியபோது, அவர்களுடன் முதன்முதலில் சென்றவர்களில் தமிழர்களும் இருந்தனர்.
குறிப்பாக, பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து திறமையான தச்சர்கள், கொத்தனார்கள், நெசவாளர்கள் மற்றும் வணிகர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இத்தீவின் தொடக்ககாலக் கட்டமைப்புப் பணிகளில் இவர்களின் பங்கு அளப்பரியது.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலம் (1848-க்குப் பிறகு)
ரீயூனியன் தீவுத் தமிழர்களின் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக இது அமைந்தது. 1848-ஆம் ஆண்டு அங்கு அடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. இதனால், அங்கு பரந்து விரிந்து கிடந்த கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யப் பெரும் பணியாட்கள் தேவைப்பட்டனர்.
இதனை ஈடுசெய்ய, பிரெஞ்சு அரசும் பிரித்தானிய அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தென்னிந்தியாவிலிருந்து (குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து) பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ‘ஒப்பந்தக் கூலிகளாக’க் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களை உள்ளூர் மக்கள் “மல்பார்” (Malbar) என்று அழைத்தனர். இது ‘மலபார்’ என்ற சொல்லின் திரிபாகும். தென்னிந்தியர்கள் அனைவரையுமே குறிக்க இச்சொல் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
கப்பல் பயணத்தில் தொடங்கி, கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் வரை தமிழர்கள் சந்தித்த துயரங்கள் சொல்லில் அடங்காதவை.
கடின உழைப்பு: காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் தொடங்கும் இவர்களின் உழைப்பு, சூரியன் மறைந்த பிறகே முடிவுக்கு வரும். மிகக் குறைந்த ஊதியமும், கடுமையான தண்டனைகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டன.
பெயர் மாற்றம்: பிரெஞ்சு ஆதிக்கத்தின் விளைவாக, பல தமிழர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டு, அவர்களுக்குக் கிறிஸ்தவப் பெயர்கள் சூட்டப்பட்டன.
மொழிப் பறிப்பு: பள்ளிகளிலும் பொது இடங்களிலும் பிரெஞ்சு மொழியே கட்டாயமாக்கப்பட்டது. இதனால், அடுத்தடுத்த தலைமுறையினருக்குத் தாய்மொழியான தமிழைக் கற்கவோ, பேசவோ முடியாத ஒரு சூழ்நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
மொழியும், உண்மையான பெயரும் பறிக்கப்பட்டாலும், ரீயூனியன் தமிழர்கள் தங்கள் உள்ளத்தில் இருந்த ஆன்மீகத்தையும், பண்பாட்டையும் இழக்கச் சம்மதிக்கவில்லை. பகலில் பிரெஞ்சு முதலாளிகளின் வற்புறுத்தலால் தேவாலயங்களுக்குச் சென்றாலும், இரவில் கரும்புத் தோட்டங்களுக்கு நடுவே சிறிய கற்களை நட்டு, தங்களின் குலதெய்வங்களையும், மாரியம்மன், முனியப்பன், மதுரை வீரன் போன்ற காவல் தெய்வங்களையும் ரகசியமாக வழிபட்டனர்.
காலப்போக்கில் இந்தக் கூட்டான வழிபாடு பெரிய கோயில்களை உருவாக்கக் காரணமாக அமைந்தது. தைப்பூசம், காவடி எடுத்தல், மற்றும் தீமிதி திருவிழா (பூக்குழி இறங்குதல்) ஆகியவை இன்றும் ரீயூனியன் தீவின் மிக முக்கியப் பண்பாட்டு அடையாளங்களாகத் திகழ்கின்றன.
தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளான முருங்கைக்காய் சாம்பார், ரசம், புளிக்குழம்பு போன்றவை உள்ளூர் கலாச்சாரத்தோடு கலந்து, இன்று ரீயூனியன் தீவின் பிரத்யேக உணவுப் பழக்கமாகவே மாறிவிட்டது.
ரீயூனியன் தீவின் மொத்த மக்கள் தொகையே சுமார் ஒன்பது இலட்சம் பேர்தான். இதில் ஏறக்குறைய முப்பது விழுக்காட்டினர் (30%), அதாவது கிட்டத்தட்ட இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நம் தமிழ் வம்சாவளியினரே!
அங்குள்ள மக்கள் தமிழர்களை மரியாதையுடன் “மல்பார்” (Malbar) என்று அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒப்பந்தக் கூலிகளாகக் கப்பல் ஏறியவர்கள், இன்று அந்தத் தீவின் முதுகெலும்பாக, தவிர்க்க முடியாத பெரும்பான்மைச் சக்தியாக உருவெடுத்துள்ளனர்.
வெறும் கூலிகளாக தமிழ்நாட்டிலிருந்து கொண்டுசெல்லப்பட்டவர்கள் இன்று அந்தத் தீவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் மாபெரும் அரசியல் தலைவர்களாகவும், பெரும் தொழிலதிபர்களாகவும் உயர்ந்து நிற்கிறார்கள்.
ஜோன் பால் வீரப்பிள்ளை (Jean-Paul Virapoullé): இவரைப் பற்றிச் சொல்லாமல் ரீயூனியன் தீவின் அரசியலை முழுமையாக்க முடியாது. செயிண்ட் ஆண்ட்ரே (Saint-André) என்னும் முக்கிய நகரத்தின் முதல்வராக பல தசாப்தங்கள் கோலோச்சிய இவர், பிரான்சு நாட்டின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் (Senator) பதவி வகித்துத் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தார்.
இன்று ரீயூனியன் தீவின் முன்னணி மருத்துவர்கள், தலைசிறந்த வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என அனைத்து உயர் பதவிகளிலும் தமிழர்களே பெருமளவில் வீற்றிருக்கின்றனர். தீவின் பொருளாதாரச் சக்கரத்தைச் சுழற்றும் முக்கிய வணிக நிறுவனங்கள் பலவும் தமிழர்களின் வசமே உள்ளன.
காலனித்துவ காலத்தில் பள்ளிகளில் பிரெஞ்சு மொழி மட்டுமே கற்க வேண்டும் என்ற கட்டாயத்தால் தமிழர்களின் தாய்மொழி பறிக்கப்பட்டது. ஆனால், ரியூனியன் தமிழர்கள் தமிழ்த் தாயைத் தங்கள் சமையலறையிலும், விவசாய நிலங்களிலும் உயிர்ப்புடன் வைத்திருந்தார்கள். அதன் விளைவு? இன்று ரீயூனியன் தீவு மக்கள் பேசும் உள்ளூர் மொழியான ‘கிரியோல்’ (Creole) மொழியில் ஏராளமான தமிழ்ச் சொற்கள் நீக்கமற நிறைந்துள்ளன.
முருங்கை: அங்குள்ள சந்தைகளில் பிரெஞ்சுக்காரர்களும் ஆப்பிரிக்கர்களும் இதை “முருங்” (Mourongue) என்றுதான் வாங்குகிறார்கள்.
கொத்தமல்லி: அங்குள்ள மொழியில் இது “கொத்துமிலி” (Cotomili).
பீர்க்கங்காய்: இது கிரியோல் மொழியில் “பிப்பங்காய்” (Pipengaille) என மருவியுள்ளது.
அதுமட்டுமின்றி, அங்குள்ள உணவகங்களில் மிகவும் பிரபலமான உணவு “றுகாய்” (Rougail). இது நமது ‘ஊறுகாய்’ மற்றும் தக்காளித் தொக்கு முறையிலிருந்து உருவான ஒரு பாரம்பரிய உணவாகும்!
ரீயூனியனின் அடையாளமான தமிழ்க் கோவில்கள்
தங்கள் வேர்களை மறக்காத தமிழர்கள், அந்தத் தீவு முழுவதும் வண்ணமயமான தமிழ் கட்டிடக்கலையில் பிரம்மாண்டமான கோவில்களை எழுப்பியுள்ளனர்.
கோலசு மாரியம்மன் கோவில் (Temple du Colosse): செயிண்ட் ஆண்ட்ரே நகரில் அமைந்துள்ள இக்கோவில், தென்னிந்தியக் கட்டிடக்கலையின் உச்சம். தீவின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.
தைப்பூசத் திருவிழா அங்கே ஒரு தேசியப் பண்டிகை போலக் கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வரும் காட்சியைக் காண உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.
தீமிதித் திருவிழா: ‘பூக்குழி இறங்குதல்’ எனப்படும் தீமிதித் திருவிழா அங்கு மிகவும் பிரபலம். ஆச்சரியம் என்னவென்றால், பெயர் மாற்றப்பட்டு, தலைமுறை தலைமுறையாகக் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் தமிழ் வம்சாவளியினரும், மாலை அணிந்து, விரதமிருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி தீமிதிப்பார்கள். “மதம் மாறினாலும் எங்கள் ரத்தத்தில் ஓடும் பண்பாடு மாறாது” என்பதற்கான வாழும் சாட்சி இது!
அதே போல ரீயூனியன் தீவில் “தமிழ்ப் புத்தாண்டு” (Puthandu) என்பது வீடுகளுக்குள் சுருங்கிவிடும் ஒரு பண்டிகை அல்லமால் அது வீதிகளில் இறங்கிக் கொண்டாடப்படும் ஒரு மாபெரும் சமூகப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது !
ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வாக்கில் வரும் சித்திரைத் திருநாளை முன்னிட்டு, தீவின் வீதிகள் முழுவதும் வண்ணக் கோலங்களால் நிறைந்து வழியும். வீடுகளைச் சுத்தம் செய்து, வாசலில் மாக்கோலம் இட்டு, மாவிலை கட்டிப் புத்தாண்டை வரவேற்பார்கள்.
புத்தாண்டு அன்று மாலையில் நடைபெறும் பண்பாட்டு ஊர்வலங்கள் மிகச் சிறப்பானவை. பிரெஞ்சு மண்ணில் தாரை தப்பட்டை முழங்க, பறை இசை அதிர, கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் எனத் தமிழர் கலைகள் வீதிகளில் அரங்கேறும். இளைஞர்களும் இளம்பெண்களும் பட்டு வேட்டி, பட்டுப் பாவாடை மற்றும் சேலை அணிந்து இந்த ஊர்வலங்களில் மிடுக்காகப் பங்கேற்பார்கள்.
தீவில் உள்ள அனைத்து மாரியம்மன், முருகன் மற்றும் சிவபெருமான் கோவில்களிலும் புத்தாண்டன்று சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும். குடும்பம் குடும்பமாகத் தமிழர்கள் கோவில்களில் கூடி இறைவனை வழிபடுவார்கள்.
இங்கே மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இந்தத் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டங்களை அங்குள்ள பிரெஞ்சு உள்ளாட்சி மன்றங்கள் (Mairies) அதிகாரப்பூர்வமாக ஆதரித்து, நிதியுதவி செய்து, திருவிழாக்களை முன்னின்று நடத்துகின்றன. அந்தத் தீவின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


