பங்களாதேஷ் பிரீமியர் லீக்: ஊதியம் இல்லாததால் வெளிநாட்டு வீரர்கள் போட்டியை புறக்கணிப்பு
பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் வீரர்களுக்கான ஊதியம் வழங்காத பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கை வீரர்கள் உட்பட வெளிநாட்டு வீரர்கள் பாதிப்படைந்திருப்பதோடு இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.
இதில் ஊதியம் வழங்கப்படாததால் இலங்கை சகலதுறை வீரர் லஹிரு சமரகோன் உட்பட ஆறு வெளிநாட்டு வீரர்கள் பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகளை புறக்கணித்துள்ளனர். டர்பன் ராஜ்ஷாஹி அணியைச் சேர்ந்த வீரர்களே இந்த புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஞாயிறன்று நடந்த ரங்புர் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த வெளிநாட்டு வீரர்கள் ஆட மறுத்தனர். பங்களாதேஷ் பிரீமியர் லீக் விதியின்படி, ஆடும் பதினொருவர் அணியில் குறைந்தது இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இருக்க வேண்டும் என்றபோது தொழில்நுட்ப குழுவின் விசேட அனுமதியின் பேரிலேயே ராஜ்ஷாஹி இந்தப் போட்டியில் பங்கேற்றது.
இந்தப் போட்டியில் ராஜ்ஷாஹி அணி எதிர்பாராத வெற்றியை பெற்றிருந்தது. போட்டிக்குப் பின்னர் பேசிய அந்த அணித் தலைவர் தக்சின் அஹமட், ‘பங்களாதேஷ் வீரர்களுக்கு காசோலை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். முன்னதாக இரண்டு வாரங்களாக கொடுப்பனவை வழங்காததால் ராஜ்ஷாஹி அணியின் பங்களாதேஷ் வீரர்கள் பயிற்சியை புறக்கணித்திருந்தனர். அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கான கட்டணத்தை செலுத்தாததும் பிரச்சினையை ஏற்படுத்தியது.
ராஜ்ஷாஹி அணிக்காக ஆட சமரகோன் உட்பட வெளிநாட்டு வீரர்கள் 15,000 அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளனர். ஊதியம் செலுத்தாதது தொடர்பில் இந்த வீரர்கள் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடமும் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ராஜ்ஷாஹி அணிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்த அணிக்கு போதுமான கால அவகாசம் வழங்கியபோதும் அதனை சரி செய்ய தவறி இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஊடகக் குழு தலைவர் இப்திகார் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சித்தகொங் கிங்ஸ் அணிக்காக ஆடும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவும் ஊதியத் தொகையை வழங்கத் தவறியதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போட்டியில் பங்கேற்பதை நிராகரித்திருந்தார்.
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் முதல் இரு பருவங்களான 2012 மற்றும் 2013 தொடர்களிலும் வீரர்களின் ஒப்பந்தக் கொடுப்பனவை வழங்காத பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோன்று ஊழல் சர்ச்சையால் 2014 தொடர் ரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.