பொலிஸ்மா அதிபர் விவகாரம் பிரதிவாதியாக ரணில்

தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி, தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்புக்கு முரணானது என இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று செவ்வாய்க்கிழமை (29) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மனுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிட அனுமதி கோரினார்.

இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக பெயரிட அனுமதித்த மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு,மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது. முன்னதாக, இந்த மனுவை ஏழு தொடர்புடைய மனுக்களுடன் உயர்நீதிமன்றம் பரிசீலித்தது.

இந்த மனுமீதான விசாரணை நிறைவடையும் வரை தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக செயற்பட, கடந்த ஜுலை மாதம் 24 ஆம் திகதியன்று உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin