போலி ஆவணங்களுடன் ருமேனியா அனுப்பிய நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

போலி ஆவணங்கள் மற்றும் உத்தியோகபூர்வற்ற முத்திரைகள் மூலம் இளைஞர்கள் குழுவொன்றை ருமேனியாவிற்கு வேலைக்கு அனுப்ப முயன்ற நபரை விமான நிலையப் பணியகப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக ருமேனியாவிற்கு வேலைக்குச் செல்ல முற்பட்ட ஐந்து இளைஞர்களின் ஆவணங்களைச் சரிபார்த்த போது அவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

பின்னர், கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவு அதிகாரிகள், அவர்களுடன் வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பிரதிநிதியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

இதன்போது குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சட்டவிரோதமானது என்பது தெரியவந்துள்ளது.

எனவே, வெளிநாடு செல்ல வந்த இளைஞர்களின் பணியகப் பதிவு உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் கடுமையாகச் சரிபார்த்ததில், உத்தியோகபூர்வமற்ற முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதிகாரிகளிடம் வழங்கப்பட்ட ருமேனியா விசாக்கள் போலி விசாக்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவருக்கு உதவிய மற்றுமொரு நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: admin