நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கு மே மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 ஜூலை 22ஆம் திகதி அப்போதைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நல்லூர் ஆலயப் பின்வீதி வழியாகக் காரில் சென்றுகொண்டிருந்த போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் அதிஸ்டவசமாக அவர் உயிர் தப்பியிருந்தார். எனினும், அவரின் மெய் பாதுகாவலாக இருந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தார்.
தாக்குதலின் பின்னர் பொலிஸார் மேற்கொண்ட தீவிர வேட்டையின் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை நல்லூர் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் சட்டமா அதிபரினால் சந்தேகநபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் இடம்பெற்று வந்த நிலையில், நீதிபதி மா. இளஞ்செழியன் சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய நீதிபதி மா. இளஞ்செழியன் நேற்று முன்தினம் மன்றில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்தார்.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் மன்றில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ளார்.
இதன்போது, உங்கள் கைத்துப்பாக்கியை அடையாளம் காட்ட முடியுமா ? என அரச சட்டவாதி சாட்சியிடம் கேட்ட போது , “ஆம்” என பதிலளித்தார்.
ஆனால் குறித்த துப்பாக்கியை சாட்சி அடையாளம் காட்ட துப்பாக்கி மன்றில் இருந்திருக்கவில்லை.
கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் வழங்கப்பட்டுள்ளநிலையில் , அது மீள பெறப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து , பிரதான சான்று பொருள் இல்லாது, விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என தெரிவித்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி ஒத்திவைத்தார்.
அத்துடன் அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் இருந்து கைத்துப்பாக்கியை மீள பெற்று, சான்று பொருளாக மன்றில் அதனை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிபதி கட்டளையிட்டார்.