உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கடந்த 24ஆம் திகதி இலங்கைக்கு ஒருநாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இப்ராஹிம் ரைசி, இந்தப் பயணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அரச தலைவர்கள் அல்லது உயர் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் நபர்கள் எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பது சம்பிரதாயமாகும்.
என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இப்ராஹிம் ரைசி சந்தித்திருக்கவில்லை. ஈரான் ஜனாதிபதியுடனான சந்திப்பை சஜித் புறக்கணித்தமையே இதற்கு காரணமென சில செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கு பதில் அளித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார,
இந்த நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை சந்திக்கும் கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்ததாக வெளியான தகவல் பொய்யானது.
கொழும்பில் உள்ள ஈரான் தூதரகம், எதிர்க்கட்சித் தலைவர் ஈரான் ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கும் இராப்போசன விருந்துகளில் ஒருபோதும் சஜித் பிரேமதாச கலந்து கொள்வதில்லை என்ற காரணத்தினால், ஈரான் ஜனாதிபதிக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.