மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான கோரிக்கை அடங்கிய பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று (12) இலங்கை மின்சார சபை கையளிக்கவுள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் இந்த பிரேரணையை கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
மின்சாரக் கட்டணங்கள் மூலம் பொதுமக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். குறைந்த வருமானம் கொண்டவர்கள் நிச்சயமாக இந்த நன்மைகளைப் பெறுவார்கள்.
கடந்த சில மாதங்களில், குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கையில் கணிசமான மழை பெய்து வருவதால், கட்டணக் குறைப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் – என்றார்.
இதேவேளை, உத்தேச மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு அமைவாக நீர்க் கட்டணமும் குறைக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு அதிகபட்ச சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன், மக்கள் மீது அதிக அழுத்தத்தை பிரயோகிக்காமல், நிவாரணம் வழங்குவதற்காக நீர் கட்டணத்திற்கான விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும்.
நீர் சுத்திகரிப்புக்கு தேவையான முக்கிய காரணிகளில் ஒன்று மின்சாரம். எனவே, மின் கட்டணம் குறைக்கப்பட்டால் அவசியம் நீர் கட்டணமும் குறைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.