ஞானசார தேரர் விடயத்தில் ‘நான் தவறாக வழிநடத்தப்பட்டேன்’ – மைத்திரி

ஞானசார தேரர் விடயத்தில் ‘நான் தவறாக வழிநடத்தப்பட்டேன்’ – பகிரங்க மன்னிப்புக் கோரினார் மைத்திரி

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய நடைமுறையின்போது, ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் தன்னைத் தவறாக வழிநடத்தியதாகவும், அதன் விளைவாக ஏற்பட்ட தவறுகளால்தான், தேரர் மீண்டும் சிறைவாசம் அனுபவிக்கக் காரணமாக அமைந்தது என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

இன்று திங்கட்கிழமை (19) வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

 

குறித்த விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பின் நகலைத் தான் ஆராய்ந்ததாகவும், அதனடிப்படையில் ஜனாதிபதி செயலகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் காணப்பட்ட தவறுகள் மற்றும் குறைபாடுகளே நீதிமன்றத்தின் இத்தீர்மானத்துக்கு வழிவகுத்துள்ளது என்பதைப் புரிந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

பொதுமன்னிப்பு வழங்கும் விடயத்தில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அனுமதி அவசியமானது என ஜனாதிபதி செயலகத்தின் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான மேலதிக சிரேஷ்ட செயலாளர் தனக்குத் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தேவையான ஆவணங்கள் ஒருபோதும் உரிய அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்றும், அத்தகைய கட்டாய அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமலேயே தன்னிடம் கையொப்பம் பெறப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இது தன்னை திட்டமிட்டு தவறாக வழிநடத்தும் ஒரு செயற்பாடாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி, தனது ஆட்சிக் காலத்தில் அதிகாரிகளால் இழைக்கப்பட்ட இந்தத் தவறின் காரணமாகவே, பாக்கியசோதி சரவணமுத்துவுடன் தொடர்புடைய அமைப்பு ஒன்றையும் இணைத்துக்கொண்டு சந்தியா எக்னெலிகொடவினால் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் ஊடாக ஞானசார தேரர் மீண்டும் சிறையிலடைக்கப்படும் நிலை உருவானதாகத் தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தான் முழுமையாக மதிப்பதாகவும், தீர்ப்பு சரியானது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

தனது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளாலேயே இந்தத் தவறு இழைக்கப்பட்ட போதிலும், அதற்காக பௌத்த தேரர்களிடம் மன்னிப்புக் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin