நுரைச்சோலை மின் நிலையத்தின் 3 அலகுகளும் செயலிழப்பு

நுரைச்சோலை மின் நிலையத்தின் 3 அலகுகளும் செயலிழப்பு: மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என எச்சரிக்கை!

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளும் (Units) ஒரே நேரத்தில் செயலிழந்துள்ள நிலையில், முதலாவது அலகை மீள இயக்குவதற்கு குறைந்தது 4 முதல் 5 நாட்கள் வரை ஆகலாம் என்பதால், இலங்கையில் குறைந்தபட்ச அளவிலான மின்வெட்டையாவது அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என சக்தித்துறை நிபுணர் கலாநிதி விதுர ரலபனாவ எச்சரித்துள்ளார்.

 

இத் திடீர் முடக்கம் காரணமாக தேசிய மின்கட்டமைப்பிலிருந்து சுமார் 900 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மின் நுகர்வு அதிகரிக்கும் போது நாட்டின் மின்தேவையைப் பூர்த்தி செய்வதில் பாரிய சவால்கள் எழும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஞாயிற்றுக்கிழமைகளில் மின்தேவை குறைவாக இருந்ததாலும், சூரியசக்தி மின்சாரம் பகலில் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டதாலும் பெரும் பாதிப்பு உணரப்படவில்லை; எனினும் வேலை நாட்கள் ஆரம்பிக்கும் போது மின் பற்றாக்குறை தீவிரமடையும்.

 

குறிப்பாகக் காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையான உச்சக்கட்ட மின்தேவைக் காலத்தில், கையிருப்பிலுள்ள மின் உற்பத்தி போதுமானதாக இருக்குமா என்பதில் தெளிவற்ற நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது.

 

“எண்ணெய் மற்றும் டீசல் மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களை 24 மணி நேரமும் முழுமையாக இயக்கினாலும் கூட, இந்த அதீத தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே. மேலும், இதற்குப் பெருமளவிலான செலவு ஏற்படும்; இறுதியில் அச் சுமையை நுகர்வோரான பொதுமக்களே சுமக்க நேரிடும்” என கலாநிதி ரலபனாவ சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

நுரைச்சோலை மின் நிலையம் மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பும் வரை, மின் விநியோகத்தை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கும் மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கம் உடனடி அவசரகால மாற்றுத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இவ்வாறான செயலிழப்புகள் ஏற்படுவது இது முதன்முறையல்ல எனவும், கடந்த காலங்களில் பல்வேறு நிறுவனங்கள் முன்வைத்த பரிந்துரைகள் சரிவர நடைமுறைப்படுத்தப்படாமல் பொறுப்புகள் தட்டிக்கழிக்கப்பட்டதே இந்நிலைக்குக் காரணம் எனவும் அவர் சாடியுள்ளார்.

 

“தற்போதைய செயலிழப்பின் உடனடிக் காரணத்தை மட்டும் ஆராய்ந்து கொண்டிராமல், மின்சாரத் துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பலவீனங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். ‘குரங்கு எங்கு தாவியது’ என்பதைக் கண்டறிவதை விட, எந்தக் குரங்கு தாவினாலும் ஒட்டுமொத்த மின்கட்டமைப்பும் முடங்கிவிடாமல் ஸ்திரமாகப் பேணக்கூடிய உறுதியான பொறிமுறையை உருவாக்குவதே இப்போதைய அவசியமாகும்” என அவர் உதாரணமிட்டுக் குறிப்பிட்டார்.

 

முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் திடீரென முடங்கினாலும் நுகர்வோருக்குத் தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையிலான வலுவான மாற்று அவசரகாலத் திட்டங்களின் (Contingency measures) அவசியத்தை இச் சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin