குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த இலங்கைப் பெண்!
குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் நோக்கிப் பயணித்த விமானத்தில் இலங்கைப் பெண்ணொருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
இன்று (19) அதிகாலை ஜசீரா எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான J9-551 விமானத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
விமானப் பணிப்பெண்களின் உடனடி உதவியுடன் பிரசவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானி முன்கூட்டியே கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, விமானம் தரையிறங்கியதும் அவசர மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.
பின்னர் தாயும் குழந்தையும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

