எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி அந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியென்பதால் நாமும் ஒவ்வொரு நாளும் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால் காந்த அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கண்டி கரலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
“ஜனாதிபதித் தேர்தலில் தேசிய சக்தியின் வேட்பாளர் அநுரகுமார வெற்றி பெறுவார் என்பதையே வெளியாகும் அனைத்து கருத்துக் கணிப்புகளும் வெளிப்படுத்துகின்றன. தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் என்ற அச்சத்தில்தான் உள்ளூராட்சித் தேர்தலை இந்த அரசாங்கம் ஒத்திவைத்தது.
ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார வெற்றி பெறுவார் என்பதால் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இம்முறை வாக்குப்பதிவுகள் இருக்காது என்ற சந்தேகமும் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், தேர்தலை எப்போது வைப்பார்கள் என்றே மக்கள் காத்திருக்கின்றனர்.
75 ஆண்டுகளாக மாறி மாறி வந்த இவர்கள் நாட்டை நாசமாக்கியது மாத்திரமே மிச்சம். உலகத்தின் முன் எமது நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த நாடு என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த வருடம் ஒக்டோபர் மாத இறுதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். அடுத்த ஏழு மாதங்களில் ஓய்வில்லாது ஒவ்வொருவரும் நாளும் உழைக்க வேண்டும். நாம் ஒரு புதிய நாட்டை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
அநுரகுமார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதும் பாராளுமன்றத்தை உடனடியாக கலைக்கும் அறிவிப்பை முதலில் வெளியிடுவார். இந்த பாராளுமன்றத்துடன் எம்மால் பணியாற்ற முடியாது. அதனால் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.” என்றார்.