அவுஸ்திரேலியப் “ஓபன்“ டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான நோவாக் ஜோக்கோவிச், தகுதிச்சுற்று வழியாக நுழையும் ஆட்டக்காரருடன் மோதவுள்ளார்.
ஜோக்கோவிச் இம்முறையும் பட்டம் வென்றால் அது அவருக்கு 11ஆவது அவுஸ்திரேலியப் “ஓபன்“ கிராண்ட் சிலாம் கிண்ணமாக அமையும். ஒட்டுமொத்தத்தில், 25வது கிராண்ட் சிலாம் பட்டமாக இருக்கும்.
கடந்த வாரம் நடந்த ஐக்கியக் கிண்ணப் போட்டியின்போது 36 வயது ஜோக்கோவிச்சுக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடனான அந்த ஆட்டத்தில் அவர் தோல்வியுற்றிருந்தார். கடந்த ஆறு ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் அவர் தோற்றது இதுவே முதன்முறை.
அவுஸ்திரேலியப் ஓபன் கிண்ணத்தை வெல்வதன்மூலம் அந்த ஏமாற்றத்தில் இருந்து அவர் மீள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம் 14ஆம் திகதிமுதல் 28ஆம் திகதிவரை அவுஸ்திரேலியப் ஓபன் போட்டிகள் நடைபெறவுள்ளன.