இந்த ஆண்டு நடக்கவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) சில போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் விரைவில் மக்களவை தேர்தல் இடம்பெறவுள்ளதுடன், அந்தக் காலப்பகுதியில் ஐபிஎல் போட்டிகளும் இடம்பெறவுள்ளதால் அமைச்சர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“இலங்கையில் சில ஐபிஎல் போட்டிகளை நடத்துமாறு இலங்கை விளையாட்டு அமைச்சர் ஜெய் ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்” என இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், 17வது ஐபிஎல் பருவப் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் 22ம் திகதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காலப்பகுதியிலேயே தேர்தலும் இடம்பெறவுள்ளது.
அந்த நேரத்தில் எந்த மாநிலமும் போட்டியை நடத்த விரும்பவில்லை என்றால், ஏதேனும் நியாயமான காரணத்துடன், போட்டியை வேறு இடத்திற்கு மாற்றலாம்,” என்று பிசிசிஐ வட்டாரம் ஒன்று ANI இடம் தெரிவித்துள்ளது.
2009 மற்றும் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐபிஎல் பதிப்புகள் அந்த ஆண்டுகளில் பொதுத் தேர்தல்கள் காரணமாக வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டது.
2009ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலும், 2014ஆம் ஆண்டு போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.