மட்ச் பிக்சிங் மற்றும் ஊழல் வலைப்பின்னல்: செர்பிய டென்னிஸ் வீரருக்கு 24 ஆண்டுகள் தடை, $70,000 அபராதம்
சர்வதேச டென்னிஸ் போட்டிகளின் முடிவுகளை மாற்றியமைக்கும் ‘மேட்ச் பிக்சிங்’ (Match-fixing) மோசடிகளில் ஈடுபட்டமை மற்றும் ஏனைய வீரர்களை ஊழல் வலையமைப்பில் இணைத்தமைக்காக, செர்பிய டென்னிஸ் வீரர் ஸ்டீபன் மிலிசெவிச் (Stefan Milicevic) என்பவருக்கு 24 ஆண்டுகள் நீண்டகாலத் தடையும், 70,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதித்து சர்வதேச டென்னிஸ் நேர்மை முகமை (ITIA) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச டென்னிஸ் நேர்மை முகமை (International Tennis Integrity Agency – ITIA) மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் முடிவிலேயே இக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
29 வயதான மிலிசெவிச், 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், தான் நேரடியாகப் பங்கேற்ற 5 போட்டிகள் உட்பட மொத்தம் 6 போட்டிகளின் முடிவுகளைத் தமக்குச் சாதகமாக மாற்றியமைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தனது ஒற்றையர் தரவரிசையில் (Singles ranking) 1,338 ஆவது இடத்திற்கு மேல் முன்னேறாத மற்றும் கீழ்மட்ட போட்டிகளில் மட்டுமே விளையாடிய மிலிசெவிச், பல தொழில்முறை வீரர்களை ஒரு பாரிய “ஊழல் வலையமைப்பில்” இணைத்துள்ளார். இதன் விளைவாக அக் காலப்பகுதியில் மேலும் பல வீரர்கள் போட்டி முடிவுகளை மாற்றி மோசடி செய்ய வழிவகுத்ததாக ITIA சுட்டிக்காட்டியுள்ளது.
தன் மீதான முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு மிலிசெவிச் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்பதுடன், கண்டறியப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில்களை அளிக்கத் தவறியுள்ளார்.
24 ஆண்டுகள் விதிக்கப்பட்ட இத் தடையின் காரணமாக, இவர் 2050 ஆம் ஆண்டு வரை எவ்வித தொழில்முறை டென்னிஸ் போட்டிகளிலோ அல்லது அது சார்ந்த உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலோ பங்குபற்ற முடியாது. அத்துடன் அவருக்கு 70,000 அமெரிக்க டொலர் நிதி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்தப் போட்டிகளின் முடிவுகள் இவ்வாறான மோசடிகளுக்கு உள்ளாக்கப்பட்டன என்பது குறித்த விபரங்களையோ, அல்லது இந்த ஊழல் வலையமைப்பில் தொடர்புடைய ஏனைய வீரர்களின் பெயர்களையோ சர்வதேச டென்னிஸ் நேர்மை முகமை (ITIA) தற்போது வரை பகிரங்கமாக வெளியிடவில்லை.

