பிரான்சில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வெடித்த மாபெரும் போராட்டம்!!

பிரான்சில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வெடித்த மாபெரும் போராட்டம்!!

நகரசபைக்குத் தீவைப்பு, கை துண்டிக்கப்பட்ட கொடூரம் என நாடே போர்க்களமானது!

பிரான்சில் நாளுக்கு நாள் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும், கல்வித் துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரியும் நாடு முழுவதும் நேற்று மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

 

மஞ்சள் ஆடையினர், மாணவர்கள், தொழிலாளர்கள் என சுமார் எட்டு இலட்சம் பேர் வீதிகளில் இறங்கித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

 

ஜனாதிபதித் தேர்தலுக்குச் சரியாக ஆறு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் வெடித்துள்ள இந்தப் போராட்டம், பல முக்கிய நகரங்களில் எதிர்பாராத விதமாகக் கலவரமாகவும் சூறையாடலாகவும் மாறி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

போராட்டத்தின் உச்சக்கட்டமாக லிமோஜ் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரசபைக் கட்டடத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்குக் கொடூரமாகத் தீவைத்துள்ளனர்.

 

இதனால் அந்தக் கட்டடம் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதேவேளை, சென்-எத்தியேன் நகரில் கூட்டத்தைக் கலைக்கக் காவற்துறையினர் வீசிய குண்டு வெடித்ததில், அதை எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் கை முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

போர்டோ நகரில் மாவட்ட ஆட்சியரின் இல்லம் தாக்கப்பட்டதுடன், அங்குள்ள பிரபல கடைகள் பலவும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளன.

 

லியோன் மற்றும் துலூஸ் நகரங்களிலும் சொகுசுப் பொருட்கள் விற்கும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுப் பொருட்கள் அப்பட்டமாகக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

 

தலைநகர் பாரிசிலும் நிலைமை முற்றிலும் கைமீறிப் போயுள்ளது. அங்குப் பல வீதிகள் வன்முறையாளர்களால் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாகப் பாரிஸ் நகர முதல்வர் எமானுவேல் கிரகுவா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 

அமைதியான முறையில் போராட வந்த மக்களுக்கும், வன்முறையில் ஈடுபடும் இத்தகைய சமூக விரோதிகளுக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

இந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பிரெஞ்சு பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அமைதியான போராட்டங்களுக்கு மட்டுமே ஜனநாயகத்தில் இடமுண்டு என்றும், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துபவர்களைக் காவற்துறை ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

வன்முறை மூலம் யாரும் அரசியலைத் தீர்மானிக்க முடியாது எனக் கூறிய அவர், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துபவர்களிடமிருந்தே அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் அதிரடிச் சட்டத்தை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

 

மறுபுறம், பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியாகப் போராடி வரும் நிலையில், காவற்துறையினர் தங்கள் அடக்குமுறைகளையும் கண்மூடித்தனமான தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

Recommended For You

About the Author: admin