புதிய இஸ்ரேல் அரசாங்கத்தை விரைவில் அமைப்பேன் – ஐசென்கோட் உறுதி!
இஸ்ரேலில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தலைமை அதிகாரி காடி ஐசென்கோட், கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நீண்டகாலம் இழுத்தடிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் எந்தத் தரப்புக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தற்போதைய இடைக்காலப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குப் பதிலாக புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு ஐசென்கோட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும், அரபுப் பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா, தீவிர மரபுவாத யூதக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதா அல்லது நெதன்யாகுவுடன் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதா என்பதில் அவரது அணிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
இதுகுறித்து சமூக வலைத்தளமான X இல் பதிவிட்டுள்ள ஐசென்கோட், பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கத் தாம் விரும்பவில்லை என்றும், உரிய நேரத்தில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகத் தாம் தலைமையிலான புதிய அரசாங்கத்தை முன்வைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை நோக்கிச் செல்வதாகக் குறிப்பிட்ட அவர், வெளியேறும் பிரதமர் நெதன்யாகு இதுவரை காணப்படாத வகையில் செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இராணுவ முன்னுரிமைகள் அரசியல் நலன்களுடன் பின்னிப் பிணைந்துள்ளதாகவும், இராணுவ நடவடிக்கைகளுக்கான கால அட்டவணைகூட அரசியல் சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அரசாங்கம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தடுக்கும் நோக்கில் நெதன்யாகு ஈரானுக்கு எதிராகப் புதிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கக்கூடும் என இஸ்ரேலிய எதிர்க்கட்சியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பரந்த கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடியாவிட்டால், சிறுபான்மை தேசிய அவசரகால அரசாங்கத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைக்கத் தயாராக இருப்பதாகவும் ஐசென்கோட் தெரிவித்துள்ளார்.
ஐசென்கோட்டின் 48 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணிக்கு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறத் தேவையான 61 ஆசனங்கள் இல்லை. இதனால், அரபுப் பெரும்பான்மைக் கட்சிகளான ராஅம் மற்றும் கூட்டுப் பட்டியல் கட்சிகளின் 19 உறுப்பினர்களின் வெளிப்புற ஆதரவைப் பெறும் முயற்சியும் பரிசீலிக்கப்படுகிறது.
ஆனால், அவரது அணியில் உள்ள அவிக்டோர் லிபர்மன் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், ஷாஸ் மற்றும் ஐக்கிய தோரா யூதக் கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
மறுபுறம், நெதன்யாகு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட்டும் இந்தத் தீர்வுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது

