கணவரின் புதிய காதலால் ஆத்திரமடைந்த மனைவி!
உழைத்துக் கட்டிய சொந்த வீட்டையே இடித்துத் தரைமட்டமாக்கிய அதிர்ச்சிச் சம்பவம்!
கணவருக்குக் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த இந்தோனேசியப் பெண் ஒருவர், தான் கஷ்டப்பட்டு உழைத்துக் கட்டிய சொந்த வீட்டையே இடித்துத் தரைமட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
37 வயதான முஸ்லிமா என்பவர் பல ஆண்டுகளாக ஹாங்காங்கில் பணிபுரிந்து சேமித்த பணத்தில், இந்தோனேசியாவின் லாம்புங் மாநிலத்தில் தனது முழுச் செலவிலும் இந்த வீட்டைக் கட்டியுள்ளார்.
தனது கணவர் ராவானுக்கு கள்ளத் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து கடும் மனமுடைந்த அவர், வீட்டை இடிக்கும் தீவிர முடிவை எடுத்துள்ளார்.
வீட்டை இடிக்க வேண்டாம் எனத் தடுத்த கணவர் ராவான், 150 மில்லியன் ரூப்பியா இழப்பீடு வழங்க முன்வந்த போதிலும், முஸ்லிமா அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 11-ஆம் திகதி வீட்டை இடிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.
குடும்பப் பிரச்சினை பெரிதாகி அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கக் காவல்துறையினர் சம்பவ இடத்தில் தலையிட்டனர்.
பின்னர் இரு குடும்பங்களின் பிரதிநிதிகளும், அப்பகுதி சமூகத் தலைவர்களும் இணைந்து நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து எழுத்துபூர்வ உடன்பாடு எட்டப்பட்டது.
இறுதியில், வீட்டை முழுமையாக இடிக்க ராவான் சம்மதம் தெரிவித்ததுடன், அது குறித்து எதிர்காலத்தில் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்துள்ளார்.

