உலகின் பிரபலமான 178 நிறுவனங்களின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்!
BBC, CNN, IKEA, Air France உள்ளிட்ட தளங்கள் பாதிப்பு!
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலமான நிறுவனங்களின் இணையதளங்களை இலக்குவைத்து பாரிய சைபர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் BBC, CNN, IKEA, HSBC வங்கி, Air France உள்ளிட்ட சுமார் 178 நிறுவனங்களின் இணையதளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இணையதளங்களின் செயல்பாடுகளை நிர்வகிக்கவும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் Optimizely என்ற டிஜிட்டல் மென்பொருள் தளத்தை இலக்குவைத்து ஹேக்கர்கள் இந்தத் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
இதன் ஊடாக இணையதளங்களில் தீங்கிழைக்கும் JavaScript குறியீடுகள் புகுத்தப்பட்டுள்ளன. இதனால் இணையதளங்களைப் பார்வையிடும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி விவரங்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கிரெடிட் கார்டு விவரங்கள், கிரிப்டோகரன்சி பணப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட நிதி சார்ந்த தகவல்களைத் திருடுவதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கமாக இருந்ததாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், Apple நிறுவனத்தின் iPhone மற்றும் iPad சாதனங்களைப் பயன்படுத்துபவர்களையும் இலக்குவைக்கும் வகையில் தீங்கிழைக்கும் குறியீடுகள் செயல்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலின் மூலம் ஒன்பது மணி நேரத்திற்குள் சுமார் 7,040 அமெரிக்க டொலர் பெறுமதியான கிரிப்டோகரன்சி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பாதிக்கப்பட்ட மென்பொருள் தளத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீங்கிழைக்கும் குறியீடுகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இணையப் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ளன.
எனவே, இணையவழி வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துவோர் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைச் சரிபார்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் காணப்பட்டால் உடனடியாக வங்கிகளைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இணையக் கணக்குகளின் கடவுச்சொற்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் திறப்பதைத் தவிர்க்கவும், தங்களது சாதனங்களைப் புதிய பாதுகாப்புப் பதிப்புகளுக்கு மேம்படுத்தவும் பயனர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இணைய உலகின் முன்னணி நிறுவனங்கள்கூட சைபர் தாக்குதல்களுக்கு இலக்காகும் நிலையில், இணையப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனிநபரின் தனிப்பட்ட பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய விடயமாக மாறியுள்ளது.

