பிரித்தானியாவில் சட்டவிரோதமாகப் பணியாற்றுவது கண்டறியப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு,
வரி செலுத்துவோரின் நிதியிலிருந்து வழங்கப்படும் வாழ்வாதாரக் கொடுப்பனவுகள் மற்றும் தங்குமிட வசதிகளை உடனடியாக நிறுத்தும் நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளது.
உதவிகள் நிறுத்தம்: சட்ட விதிகளை மீறிப் பணியாற்றுபவர்கள், அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி மற்றும் தங்குமிட உதவிகளை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வர்.
நோக்கம்: உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களுக்கும், சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கும் மட்டுமே அரசாங்கத்தின் ஆதரவு சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
அத்துடன், பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தூண்டும் காரணிகளைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படைப் பாதுகாப்பு: இந்த நடவடிக்கையால் எந்தவொரு புகலிடக் கோரிக்கையாளரும் ஆதரவற்ற (Destitute) நிலைக்குத் தள்ளப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரப்படுத்தப்பட்ட சோதனைகள்: 2024 ஜூலை மாதத்திற்குப் பின்னர் குடிவரவு அமுலாக்கப் பிரிவினரின் (Immigration Enforcement) கைது நடவடிக்கைகள் 122% அதிகரித்துள்ளதோடு, சோதனை விஜயங்களும் 111% உயர்ந்துள்ளன.
விதிகளை மீறுபவர்களுக்கான செலவுகளை இனி வரி செலுத்துவோர் சுமக்க வேண்டியதில்லை என்பதை இந்த மாற்றங்கள் உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தின் (Home Office) ‘Asylum Support (Amendment) Regulations 2026’ மற்றும் ஜூன் 2026-இல் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின் கீழ், சட்டவிரோதமாகப் பணியாற்றுவது
புகலிட ஆதரவு நிபந்தனைகளை மீறும் செயலாகக் கருதப்பட்டு, பிரிவு 95 (Section 95), பிரிவு 98 (Section 98) மற்றும் பிரிவு 4 (Section 4) ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் உதவிகளை இடைநிறுத்தவோ அல்லது இரத்து செய்யவோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2024 ஜூலை முதல் 2026 ஜூன் வரையிலான காலப்பகுதியில் சுமார் 25,000 சோதனை விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டு, 17,000-க்கும் மேற்பட்ட கைதுகள் இடம்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

