நோர்வேயில் மூன்று ஆண்டுகளில் நிரந்தர வதிவிட அனுமதி…!

நோர்வேயில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் குறிப்பிட்ட மூன்று பிரிவினருக்கு, மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக நாட்டில் வசித்த பின்னர் நிரந்தர வதிவிட அனுமதிக்கு Permanent_Oppholdstillatelse விண்ணப்பிக்கும் வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

நோர்வே குடிவரவு இயக்குநரகமான UDI வெளியிட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் இச்செய்தி அமைந்துள்ளது.

மூன்றாண்டுகளில் வதிவிட அனுமதியை யார் பெற முடியும்!

தொழில் அடிப்படையில் குடியேறியவர்கள்: நிரந்தர வதிவிடத்திற்கு தகுதியளிக்கும் தொழில் சார்ந்த அனுமதியுடன் நோர்வேயில் பணியாற்றுபவர்கள்.

நோர்வே அல்லது நோர்டிக் நாட்டுப் பிரஜைகளின் குடும்ப உறுப்பினர்கள்:

குடும்ப இணைவு அனுமதியில் நோர்வேயில் வசிப்பவர்கள்.

ஏனைய வெளிநாட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள்: அகதி அல்லது மனிதாபிமான அடிப்படையிலான அனுமதி இல்லாத வெளிநாட்டவர்களுடன் குடும்ப இணைவு மூலம் வசிப்பவர்கள்.

ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியவர்கள்!

அகதி அந்தஸ்து, மீள்குடியேற்ற அகதிகள் திட்டம் அல்லது மனிதாபிமான அடிப்படையில் வதிவிட அனுமதி பெற்றவர்கள் பொதுவாக ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்திருக்க வேண்டும். இவர்களுடன் குடும்ப இணைவு மூலம் வந்தவர்களுக்கும் ஐந்தாண்டு விதி பொருந்தலாம்.

மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வசித்திருப்பது மட்டும் போதுமானதல்ல. அனுமதியின் வகை மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைக்கேற்ப கூடுதல் நிபந்தனைகளும் பொருந்தும்.

செல்லுபடியாகும் வதிவிட அனுமதியுடன் தொடர்ச்சியாக வசித்திருக்க வேண்டும்.

மூன்றாண்டு காலப்பகுதியில் பொதுவாக ஏழு மாதங்களுக்கு மேல் நோர்வேக்கு வெளியே தங்கியிருக்கக்கூடாது.
கடந்த ஓராண்டில் குறைந்தபட்சம் 341,373 நோர்வே குரோணர் சொந்த வருமானம் பெற்றிருக்க வேண்டும்; சிலருக்கு விலக்கு உண்டு.

பொதுவாக A2 நிலை வாய்மொழி நோர்வே மொழித் தேர்விலும் சமூக அறிவியல் தேர்விலும் சித்தியடைந்திருக்க வேண்டும்; விதிவிலக்குகள் உள்ளன.

இது அனைவருக்கும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாண்டுச் சலுகை அல்ல.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மூன்று மற்றும் ஐந்தாண்டு வதிவிட விதிமுறைகளை விளக்கும் செய்தியாகும். மேலும், நிரந்தர வதிவிட அனுமதி என்பது நோர்வே குடியுரிமை Statsborgerskap அல்ல.

நோர்வேயில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களது வதிவிட அனுமதியின் வகையை அறிந்துகொள்வது அவசியம்.
ஏனெனில் ஒரே நாட்டில் ஒரே காலப்பகுதியில் வசித்தாலும், நிரந்தர வதிவிட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டிய காலம் வேறுபடலாம்

Recommended For You

About the Author: admin