2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரை நாளை (12) பிற்பகல்!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரை நாளை (12) பிற்பகல்!

வரவு – செலவுத் திட்ட விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 26 நாட்கள் நடைபெறவுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (12) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதற்காக நாடாளுமன்றம் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த 2026 ஒக்டோபர் 7ஆம் திகதி முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை ஏழு நாட்கள் நடைபெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 20ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அத்துடன், குழுநிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் நான்கு சனிக்கிழமைகளும் உள்ளடங்குகின்றன.

இறுதியாக, வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகளுக்கான நேர ஒதுக்கீடு

வரவு – செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் நாட்களில்,

– காலை 9.30 முதல் 10.00 மணி வரை நாடாளுமன்ற அலுவல்கள் இடம்பெறும்.
– காலை 10.00 முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைகளுக்கான ஐந்து கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்படும்.
– காலை 10.30 முதல் 11.00 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான ஒரு கேள்விக்காக நேரம் ஒதுக்கப்படும்.
– காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வரவு – செலவுத் திட்ட விவாதம் நடைபெறும்.

வாக்கெடுப்பு நடைபெறும் நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 14 ஆகிய இரு தினங்களைத் தவிர்ந்த ஏனைய நாட்களில், மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையிலான பிரேரணைகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin