வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் பிரதமருடன் புத்திஜீவிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் சந்திப்பு!

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் பிரதமருடன் புத்திஜீவிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் சந்திப்பு!

வடக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைகள், மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால முன்னேற்றம் தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூகத் தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர், பிரதமரைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

 

கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்றுள்ளது.

 

இதன்போது வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை, அபிவிருத்திச் சவால்கள், மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, பல தசாப்தங்களாகத் தொடரும் இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்றப் பிரச்சினைகள், காணி உரிமை, காணிகளை மீளப்பெறுதல், போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

 

அத்துடன், வடக்கு மாகாணத்தில் காணப்படும் விவசாய நிலங்கள் மற்றும் கடல் வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி, அவற்றின் ஊடாக உற்பத்தியை அதிகரித்தல், விவசாயம் மற்றும் கடற்றொழில் துறைகளை மேம்படுத்துதல், புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் அவற்றின் மூலம் பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.

 

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான முன்னுரிமைகள் மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை உள்ளடக்கிய விரிவான PowerPoint விளக்கக்காட்சிகளும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

 

மேலும், வடக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட அபிவிருத்தி முன்மொழிவுகள் அடங்கிய ஆவணமும் பிரதமரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

 

அரசியல் நோக்கங்களுக்கு அப்பால், மக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் வடக்கு மாகாணத்தின் எதிர்கால முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு, அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய சமத்துவமான மற்றும் நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதே இக்குழுவினரின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin