உக்ரைன் மீது ரஷ்யா பாரிய ஏவுகணைத் தாக்குதல்!!
தலைநகர் கீவில் மின்சாரம், குடிநீர் விநியோகம் பாதிப்பு!
உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட 13 பிராந்தியங்களை இலக்குவைத்து ரஷ்யா நடத்தியதாகக் கூறப்படும்
பாரிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களில், சிறுவர் ஒருவர் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் வெளியிட்டுள்ள தகவலின்படி, 172 ஆளில்லா விமானங்களும் 36 பாலிஸ்டிக் ஏவுகணைகளும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளும் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்குவைத்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, மின்சார உட்கட்டமைப்புகள் தாக்கப்பட்டதால் தலைநகரில் மின்சாரம், குடிநீர் மற்றும் வெப்பமூட்டும் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குடியிருப்புக் கட்டடங்கள், கீவின் வடக்குப் பாலம் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றும் சேதமடைந்துள்ளன.
மேலும், ரிவ்னே மற்றும் க்மெல்னிட்ஸ்கி அணுமின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கீவ் உள்ளிட்ட மத்திய பிராந்தியங்களுக்கு விநியோகிக்கும் துணை மின் நிலையம் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வின்னிட்சியா, ஷிடோமிர், ரிவ்னே, கார்கிவ் மற்றும் டினிப்ரோ பிராந்தியங்களிலுள்ள துணை மின் நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.
அமெரிக்காவிடம் அவசர ஆதரவு கோரும் உக்ரைன்!
முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளுக்கான தயாரிப்புகள் இடம்பெறும் சூழலில் ரஷ்யா தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
குளிர்காலத்தில் நாட்டின் மின்சார விநியோகத்தை முடக்கும் நோக்கில் ரஷ்யா செயற்படுவதாகக் கூறியுள்ள உக்ரைன் தரப்பு, அமெரிக்காவின் இரு பிரதான கட்சிகளும் உக்ரைனுக்கான ஆதரவைத் தொடர வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்குவதுடன், உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவிகளையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

