36 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கேசன்துறையில் ரூ.32.9 மில்லியன் செலவில் புதிய தபால் நிலையம்!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை தபால் நிலையத்திற்கான புதிய நிரந்தரக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரூ.32.9 மில்லியன் முதலீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
கட்டுமானப் பணிகளை 2027ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய தபால் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால், நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் அமைக்கப்படுகின்றது.
முதலாம் தர தபால் நிலையமான காங்கேசன்துறை தபால் நிலையம், 3,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 16 அரச நிறுவனங்கள், 6 ஹோட்டல்கள் மற்றும் 3 கைத்தொழில் நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது.
புதிய கட்டடம் அமைக்கப்படுவதன் மூலம் பிரதேச மக்களுக்கு மேலும் வினைத்திறனான மற்றும் தரமான தபால் சேவைகளை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

