சூடானில் தொடர் ட்ரோன் தாக்குதல்கள்: 300 இற்கும் மேற்பட்டோர் பலி!
சூடான் இராணுவத்தினரால் நடத்தப்பட்டதாகக் கருதப்படும் அடுத்தடுத்த ட்ரோன் (Drone) வான்வழித் தாக்குதல்களில்,
துக்க வீட்டிற்குச் சென்றவர்கள் மற்றும் சந்தைகளில் கூடியிருந்த பொதுமக்கள் உட்பட 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூடான் இராணுவத்திற்கும் ‘விரைவு ஆதரவுப் படை’ (RSF) என்ற துணை இராணுவக் குழுவிற்கும் இடையே தீவிரமடைந்துள்ள உள்நாட்டுப் போரின் ஒரு பகுதியாகவே இக் கொடூரத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேற்கு கோர்டோஃபான் (West Kordofan) மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில்
மாத்திரம் 150 பேர் உயிரிழந்துள்ளதாக ‘சூடான் போர் அவ்சர்வேட்டரி’ (Sudan War Observatory) அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
அஞ்சலி நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகச் சுமார் 200 பேருடன் பயணித்த லொறி அல்-தபாப் (Al-Dabab) நகரை வந்தடைந்த போது அதன் மீது ட்ரோன் குண்டுவீச்சு நடத்தப்பட்டது. இதில் லொறியில் இருந்த 145 பேர் உயிரிழந்தனர்.
அதேவேளை, அஞ்சலிக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் மீது விழுந்த மற்றுமொரு குண்டில் மேலும் 5 பேர் உயிரிழந்ததுடன்,
150 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதே நாளில் அல்-முஜ்லாத் (Al-Mujlad) நகரில் உள்ள பொதுச் சந்தை ஒன்றின் மீதும் இராணுவத்தின் ட்ரோன்கள் குண்டுவீச்சு நடத்தியுள்ளன.
சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க சர்ச்சைக்குரிய பகுதியான ‘அபியே’ (Abyei) நகரின் அமியத் (Amiet) சந்தையைக் குறிவைத்து
திங்கட்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது.
RSF படையினருக்கான எரிபொருள் விநியோக மையமாக இச் சந்தை செயற்பட்டதால் இத் தாக்குதலை நடத்தியதாக இராணுவத் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
இத் தாக்குதலால் சந்தை வளாகம் முற்றிலும் தீக்கிரையானதுடன், அருகிலிருந்த குடியிருப்புகளுக்கும் தீ பரவிப் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா அமைதிப்படைகள் நிலைகொண்டுள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்குத் தெற்கு சூடான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,
தனது நாட்டின் உத்தியோகபூர்வ எதிர்ப்பைப் பதிவு செய்யச் சூடான் தூதருக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளது.
இத் தாக்குதல்கள் குறித்துக் கவலை வெளியிட்டுள்ள ஐ.நா சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்தீபன் டுஜாரிக் (Stéphane Dujarric):
“பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான உயிர்க்கொல்லி ட்ரோன் தாக்குதல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன.
சூடானில் சுமார் 20 மில்லியன் மக்கள் கடுமையான பஞ்சத்தையும் பட்டினியையும் எதிர்கொண்டுள்ள சூழலில், இவ்வாறான வான்வழித் தாக்குதல்கள் நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளன.” எனத் தொிவித்துள்ளாா்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சூடான் இராணுவத்திற்கும் ஜெனரல் மொஹமட் ஹம்தான் டாக்லோ தலைமையிலான ‘
விரைவு ஆதரவுப் படை’ (RSF) துணை இராணுவக் குழுவிற்கும் இடையே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன்,
பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து பாரிய மனிதாபிமானப் பேரழிவை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

