அனுராதபுரத்தின் பல பகுதிகளில் நாளை 8 மணிநேர நீர் வெட்டு!
இலங்கையின் அனுராதபுரம், துருவில நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால், நாளை (22) பல பகுதிகளில் 8 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அறிவிப்பின்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.
இதன்படி, விஜயபுர நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் விஜயபுர, பாலடிக்குளம், நெலும்குளம் மற்றும் கவரக்குளம் ஆகிய பகுதிகளிலும், நாச்சாதுவ நீர் விநியோகத் திட்டத்தின் கீழ் நாச்சாதுவ, ஹிதோகம, துருவில மற்றும் நெல்லிக்குளம் ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.
மேலும், தலாவ, ஸ்ராவஸ்திபுர மற்றும் தெகே கணுவ பகுதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. அனுராதபுரம் நகரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள சபை, முன்கூட்டியே நீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

