36 வருடங்களாகத் தொடரும் அவலம்

36 வருடங்களாகத் தொடரும் அவலம்: வலி. வடக்கில் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்தும் “மக்களின் காணி மக்களுக்கே” என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கண்டித்தும், இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரியும் வலி. வடக்கு மக்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

 

கடந்த 36 வருடங்களாகத் தமது பூர்வீக நிலங்களை இழந்து நிற்கும் வலி. வடக்கு மக்கள், பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தி ஆகிய இருவேறு இடங்களில் ஒன்றுகூடி இப்போராட்டங்களை முன்னெடுத்தனர்.

 

தமது நிலங்களில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், வர்த்தக நிலையங்களை அமைத்துச் சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருவதாகப் போராட்டக்காரர்கள் விசனம் தெரிவித்தனர்.

 

நீண்ட காலமாகத் தமது சொந்த நிலங்கள் மற்றும் வீடுகளை இழந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் தமக்கு, விரைவாகத் தமது காணிகளையும் வீடுகளையும் மீள ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது மக்கள் வலியுறுத்தினர்.

 

வலி. வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி அப்பகுதி மக்களால் தொடர்ச்சியாகப் பல கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin