வடக்கில் 350 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!
வட மாகாண சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், புதிதாக தெரிவுசெய்யப்பட்ட 350 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்டன.
இதில் 45 பேர் யாழ். போதனா வைத்தியசாலைக்கும், 5 பேர் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கும், எஞ்சிய 300 பேர் மாகாணத்தின் பிற வைத்தியசாலைகளுக்கும் இணைக்கப்படவுள்ளனர்.
4,219 விண்ணப்பதாரர்களிலிருந்து நேர்முகத் தேர்வு மூலம் தகைமை அடிப்படையில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி மாவட்ட வெற்றிடங்களுக்கு ஏற்பவே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், மத்திய அரசாங்கத்தைத் தவிர்த்து இத்தகைய நியமனங்களை வழங்கிய முதல் மாகாணம் வட மாகாணம் எனவும் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வில் மாகாண ஆளுநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

