கனமழையால் மூன்று நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

கனமழையால் மூன்று நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

– மகாவலி மற்றும் களனி கங்கை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை –

மத்திய மலைநாட்டில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மூன்று முக்கிய நீர்த்தேக்கங்களில் இருந்து மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இதன்படி, கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், லக்சபான நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதுடன், விமலசுரேந்திர நீர்த்தேக்கத்திலிருந்தும் நீர் மதகுகள் ஊடாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

இதன் காரணமாக மகாவலி கங்கை மற்றும் களனி கங்கை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும், மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் நீரேந்து பகுதிகளில் அமைந்துள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

 

குறிப்பாக மவுசாக்கலை, காசல்ரீ, கெனியோன், பிராட்லேண்ட், மேல் கொத்மலை, பொல்பிட்டிய, கலுகல மற்றும் நவலக்சபான உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ச்சியாக நிலைமையை அவதானித்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Recommended For You

About the Author: admin