கட்டுநாயக்க விமான நிலையத்தில் 7 கிலோவுக்கும் அதிக போதைப்பொருட்களுடன் மூன்று தாய்லாந்து பெண்கள் கைது!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட இருவேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 7 கிலோவுக்கும் அதிக எடையுடைய போதைப் பொருட்களுடன் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவற்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளினால் இந்த அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதல் நடவடிக்கை:
பாங்கொக்கிலிருந்து செப்டெம்பர் 20 அதிகாலை வேளையில் வருகை தந்த 38 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 3 கிலோ 220 கிராம் குஷ் (Kush) போதைப்பொருளும், 1 கிலோ 852 கிராம் ஹஷீஷ் (Hashish) போதைப்பொருளும் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரண்டாவது நடவடிக்கை:
விமான நிலைய வருகை முனையத்தில் முன்னெடுக்கப்பட்ட மற்றொரு சுற்றிவளைப்பில், பாங்கொக்கிலிருந்து வருகை தந்த 31 மற்றும் 36 வயதுடைய மேலும் இரு தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒருவரிடமிருந்து 1 கிலோ 994 கிராம் குஷ் மற்றும் 620 கிராம் ஹஷீஷ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், மற்றைய பெண் இந்த கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விரு நடவடிக்கைகளின் போதும் மொத்தமாக 7 கிலோ 686 கிராம் எடையுடைய போதைப்பொருட்கள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் காவற்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

