யாழில் களவாடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் மீட்பு – மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் களவாடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் கடந்த 9ஆம் திகதி 17 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல்வேறு இடங்களில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
இதனையடுத்து, நேற்று (24) முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்த இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட நகைகளின் மொத்த எடை 43 பவுண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

