இன்ஸ்ராகிராம், வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் கட்டணம் செலுத்தினால் மட்டுமே புதிய வசதிகள்!!
புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் ‘மெற்றா’ (Meta) நிறுவனம்!
‘மெற்றா’ (Meta) நிறுவனம் தனது சமூக வலைத்தளங்களான இன்ஸ்ராகிராம் (Instagram), முகநூல் (Facebook) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) ஆகியவற்றில்,
பணம் செலுத்திச் சந்தா (Abonnements) பெறுபவர்களுக்குப் பிரத்தியேகமான புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
நாளாந்தப் பதிவுகளை (Stories) மறைமுகமாகப் பார்த்தல், தனிப்பயனாக்கம் (Personnalisation), கூடுதல் சேமிப்பகம் (Stockage) மற்றும் செயற்கை நுண்ணறிவு (IA) சார்ந்த வசதிகள் போன்றன இலவசப் பயனாளர்களை விடக் கட்டணம் செலுத்துவோருக்கே இனி முழுமையாகக் கிடைக்கவுள்ளன.
இன்ஸ்ராகிராம் தளத்தில் தனிப்பயனாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தும் பயனாளர்கள் தமது பதிவுகளிலும் குறுஞ்செய்திகளிலும் பிரத்தியேகமான எழுத்துருக்களைப் (Polices) பயன்படுத்த முடியும்.
தமது பதிவுகளை யார் பார்க்கிறார்கள் என்பதற்கான அறிவிப்புகளைப் பெறுவதுடன், மற்றவர்களின் பதிவுகளை அவர்கள் அறியாதவாறு மறைமுகமாகப் பார்க்கும் வசதியும் இவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
மேலும், வழமையாக 24 மணிநேரம் மட்டுமே நீடிக்கும் பதிவுகளை 48 மணிநேரம் வரை பேணுவதற்கும் முடியும்.
முகநூல் தளத்தைப் பொறுத்தவரை குறுங்காணொளிகளில் (Reels) மேலதிக தகவல்கள், ‘மெசஞ்சர்’ (Messenger) தளத்தில் புதிய தனிப்பயனாக்கங்கள் போன்றன வழங்கப்படுகின்றன.
எனினும், கட்டணம் செலுத்தினாலும் விளம்பரங்கள் (Publicité) நிறுத்தப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் தளத்தின் கட்டணச் சந்தாவிலும் புதிய நிறவடிவமைப்புக்கள் (Thèmes) மற்றும் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஒட்டுப்படங்களுக்கு (Stickers) விசேட விளைவுகளை வழங்குதல், அதிகளவான உரையாடல்களைப் (Conversations) பிரதானப்படுத்தி வைத்தல் போன்ற வசதிகளும் கிடைக்கவுள்ளன. அத்துடன், உரையாடல்கள் மற்றும் ஊடகக் கோப்புகளைச் சேமிப்பதற்கான மேலதிக சேமிப்பக வசதியும், குறிப்பிட்ட உரையாடல்களை மறைத்து வைப்பதற்கான அல்லது ஒலியடக்கி வைப்பதற்கான (Mettre en sourdine) புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ‘மெற்றா வன்’ (Meta One) திட்டங்கள்
பிரான்சில், தனிநபர்களுக்கான ‘மெற்றா வன் கோர்’ (Meta One Core) திட்டத்திற்கு மாதமொன்றுக்கு 6,99 யூரோக்களும், ‘மெற்றா பிறீமியம்’ (Meta Premium) திட்டத்திற்கு 20,99 யூரோக்களும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவின் (Intelligence artificielle) பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், படங்களை உருவாக்குதல் அல்லது திருத்தியமைத்தல் மற்றும் காணொளிகளை உருவாக்குதல் போன்றவற்றுக்குக் கூடுதல் வசதிகள் வழங்கப்படுகின்றன.
படைப்பாளிகள் (Créateurs) மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான விசேட திட்டங்களின் கட்டணங்கள், அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாதமொன்றுக்கு 16,99 யூரோக்கள் முதல் அதிகபட்சமாக 549 யூரோக்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதன் ஊடாக மேம்படுத்தப்பட்ட வணிக வசதிகள் மற்றும் புள்ளிவிபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

