பிரான்சில் 30 மில்லியனுக்கும் அதிகமான சொத்து உரிமையாளர்கள் செலுத்தும் காணி மற்றும் சொத்து வரிக்கான (Taxe foncière) உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் நாளை (வியாழக்கிழமை, ஓகஸ்ட் 27) முதல் வெளியிடப்படவுள்ளன.
கடந்த ஆண்டுகளை விட இம்முறை வரி அதிகரிப்புச் சற்று குறைவாக இருப்பினும், மீண்டும் ஒரு வரி உயர்வை வீட்டு உரிமையாளர்கள் சந்திக்க நேரிட்டுள்ளது.
தேசியப் புள்ளியியல் நிறுவனத்தின் (Insee) பணவீக்கக் குறியீட்டின் (IPCH) அடிப்படையில், 2026-ஆம் ஆண்டிற்கான காணிகளின் வாடகை மதிப்பு (Valeurs locatives cadastrales) 0.8 விழுக்காட்டால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 நவம்பரில் பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் விலைவாசிச் சுட்டெண்ணின் அடிப்படையிலேயே இந்த தேசிய அளவிலான மதிப்பீட்டு உயர்வு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, சொத்து உரிமையாளர்கள் வழமையை விடக் கூடுதல் தொகையை வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும் எனப் பொது நிதி இயக்குநரகம் (Direction générale des Finances publiques) தெரிவித்துள்ளது.
‘எப்.எஸ்.எல்’ (FSL) நிறுவனத்தின் அண்மைய ஆய்வறிக்கையின்படி, 100,000-இற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட பெரிய நகரங்களில் இந்த வரி விகிதங்கள் பெரும்பாலும் நிலையாகவே காணப்படுகின்றன.
இருப்பினும், பிரான்சிலேயே மிக அதிக சொத்து வரியை அறவிடும் நகரமாக ‘கிரெனோபில்’ (Grenoble) 67.08 விழுக்காட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து ‘மொன்பெலியே’ (Montpellier) 58.43 விழுக்காட்டுடனும், ‘ஆஞ்சே’ (Angers) 56.42 விழுக்காட்டுடனும் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன. அதேவேளை, தலைநகர் பாரிஸ் 20.50 விழுக்காட்டுடன் இந்தப் பட்டியலில் 41-ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

