விண்வெளியில் சாதனை: 1,000 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மர்ம வானொலி சமிக்ஞை

விண்வெளியில் சாதனை: 1,000 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மர்ம வானொலி சமிக்ஞையைக் கண்டறிந்த சர்வதேச ஆய்வுக் குழுவில் இலங்கை விஞ்ஞானி

வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றிலேயே மிகத் தொன்மையான ‘வேக வானொலி வெடிப்பு’ (Fast Radio Burst – FRB) சமிக்ஞையை சர்வதேச வானியலாளர்கள் குழுவொன்று வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளது.

சுமார் 1,000 கோடி (10 பில்லியன்) ஆண்டுகளுக்கு முந்தைய விண்மீன் மண்டலத்திலிருந்து (Galaxy) இந்தச் சமிக்ஞை உருவாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த ஆய்வுக் குழுவில், இலங்கை விஞ்ஞானியான தெமிய நாணயக்கார (Themiya Nanayakkara) இணை ஆய்வாளராகப் (Co-author) பங்காற்றியுள்ளார்.

சிட்னி பல்கலைக்கழகத்தின் வானியற்பியலாளர் கலாநிதி மனிஷா காலேப் (Dr. Manisha Caleb) தலைமையில் முன்னெடுக்கப்பட்ட

இந்த மைல்கல் ஆய்வு தொடர்பான விரிவான முடிவுகள் சர்வதேச புகழ்பெற்ற ‘சயின்ஸ்’ (Science) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்காவில் அமைந்துள்ள ‘மீர்கேட்’ (MeerKAT) வானொலி தொலைநோக்கி மூலம் கடந்த 2024 ஆம் ஆண்டில் ‘FRB 20240304B’ எனப் பெயரிடப்பட்ட இந்த மர்ம சமிக்ஞை முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நாசாவின் அதிநவீன ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் (James Webb Space Telescope) பயன்படுத்தி விஞ்ஞானிகள் மேற்கொண்ட தொடர் ஆய்வில்,

பெருவெடிப்புக்கு (Big Bang) வெறும் 3 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றியதும் தீவிரமாக விண்மீன்களை

உருவாக்கி வந்ததுமான சிறிய விண்மீன் மண்டலத்திலிருந்தே இந்தச் சமிக்ஞை புறப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சூரியன் மற்றும் நமது சூரிய மண்டலமே தோன்றுவதற்கு பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே இந்தச் சமிக்ஞை தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது

எனவும், இது உண்மையிலேயே விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு அசாதாரண கண்டுபிடிப்பு எனவும் கலாநிதி மனிஷா காலேப் தெரிவித்துள்ளார்.

விண்வெளியின் பிரம்மாண்ட வலையமைப்பான ‘காஸ்மிக் வலை’ (Cosmic Web) மற்றும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பேரண்டமும் விண்மீன்

மண்டலங்களும் எவ்வாறு பரிணாம வளர்ச்சியடைந்தன என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ள இக்கண்டுபிடிப்பு வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

வேக வானொலி வெடிப்புகள் (FRB): இவை மில்லி விநாடிகள் மட்டுமே நீடிக்கும் மிக அதிவேக, சக்திவாய்ந்த மின்காந்த

அலை வெடிப்புகளாகும். மிகக் குறுகிய காலத்தில் தோன்றினாலும், சூரியன் பல நாட்களில் வெளிப்படுத்தும் ஆற்றலுக்கு இணையான ஆற்றலை இவை ஒரே நொடியில் வெளிப்படுத்துகின்றன.

தோற்றம்: பிரபஞ்சத்தில் அதிக காந்தப்புலத்தைக் கொண்ட நியூட்ரான் விண்மீன்களான ‘மேக்னடார்’களிலிருந்து

(Magnetars) இவை தோன்றியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்; இருப்பினும் அவற்றின் துல்லியமான பிறப்பிடக் காரணி இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Recommended For You

About the Author: admin